×

பலத்த காற்றுடன் மழை புதுவையில் சுற்றுலா தலங்கள் மூடல்-மரங்கள் முறிந்து விழுந்தன

புதுச்சேரி : புதுவையில் மாண்டஸ் புயலையொட்டி பலத்த காற்றுடன் பெய்த மழையால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து, மின் கம்பிகள் அறுந்து நடுரோட்டில் விழுந்தன. இதையடுத்து அமைச்சரின் உத்தரவுக்கிணங்க அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. மாண்டஸ் புயலையொட்டி முன்னெச்சரிக்கையாக அனைத்து துறைகளும் 24 மணி நேரமும் பணியில் இருக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் அரசு விடுமுறை அளித்துள்ளது.238 அரசு பள்ளிகள் தங்குமிடமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் தங்கும் வகையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்படும் 75 ஆயிரம் பேருக்கு உணவு வழங்க குடிமை பொருள் வழங்கல் துறை மற்றும் அட்சய பாத்திரா அமைப்பு மூலம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக மத்திய சமையல் கூடங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. முகாம்களில் தங்கும் மக்களுக்கு ரொட்டி-பால் வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் புதுவையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. காற்றின் தாக்கம் நேற்று அதிகாலையில் அதிகரித்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தும், மின்கம்பி அறுந்து விழுந்ததாலும் மின்தடை ஏற்பட்டது. சில இடங்களில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. ராஜீவ்காந்தி சிலை, நீடராஜப்பர் வீதி வஉசி பள்ளி அருகே ராட்சத மரமும், திருவள்ளுவர் பஸ் நிறுத்தம் அருகிலும் மரங்கள் சாய்ந்தன. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடனே மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். முதலியார்பேட்டையில் ஒரு தெருவில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் சிக்கிய நாய், பரிதாபமாக இறந்தது. மரங்களை உடனுக்குடன் வெட்டி அப்புறப்படுத்த தீயணைப்பு துறைக்கு மட்டுமின்றி காவல் துறையினருக்கும் 2 எலக்ட்ரிக் மரம் வெட்டும் கருவி வழங்கப்பட்டிருந்தது.தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. 10 அடி உயரத்துக்கு மேல் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பின. இதன் காரணமாக பழைய துறைமுகத்தில் ஏற்கனவே இடிந்து சேதமடைந்திருந்த பாலத்தின் மற்றொரு பகுதியும் இடிந்து விழுந்தது. கடல் சீற்றம் காரணமாக மீனவர்களின் படகுகள், வலைகள் அனைத்தும் தேங்காய்திட்டு துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல், கடலோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த கட்டுமரங்களையும், வலைகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்து சென்றனர். மேலும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தாழ்வான பகுதிகளான ரெயின்போ நகர், பூமியான்பேட்டை, தவளக்குப்பம் என்ஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். புயலையொட்டி சுற்றுலா தலங்களை மூடுவதற்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் உணவகம், நீர் விளையாட்டு பிரிவுகள் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அனைத்தும் நேற்று மூடப்பட்டன. மேலும் இங்குள்ள உடமைகளை பாதுகாக்கவும், இழப்பு நேராமல் தடுக்கவும் துறை அதிகாரிகள், பொறுப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல், பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா ஆகியவை நேற்று மூடப்பட்டன. மறு அறிவிப்பு வரும் வரை அவை மூடப்பட்டிருக்கும் என புதுவை நகராட்சி தெரிவித்துள்ளது….

The post பலத்த காற்றுடன் மழை புதுவையில் சுற்றுலா தலங்கள் மூடல்-மரங்கள் முறிந்து விழுந்தன appeared first on Dinakaran.

Tags : Puduvai ,Puducherry ,Mandus ,
× RELATED மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதிக்கு...