×

பரமக்குடி நகர் பகுதியில் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்-நோய் அச்சத்தில் பொதுமக்கள்

பரமக்குடி :  பரமக்குடி நகராட்சி அதிகாரிகளின் மெத்தன போக்கால், தெருக்களில் ஓடும் கழிவுநீர், துர்நாற்றத்தால் நோய் பரவும் அபாயம் உள்ளது. பரமக்குடி நகராட்சி ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகராட்சியாக உள்ளது. 36 வார்டுகளை கொண்ட இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் வாறுகால் முறையாக சுத்தம் செய்யப்படாததால், கழிவுநீர் தேங்கி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை காலங்களில் முழங்கால் அளவுக்கு கழிவுநீர் தேங்கி நிற்பதால் குடியிருப்புவாசிகள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி விடுகின்றனர். இப்பொழுது மழை இல்லை என்றாலும், கழிவுநீர் செல்வதற்கு போதுமான வாறுகால் வசதிகள் இல்லாததால், சிறுவர் பூங்கா எதிரில் உள்ள பாசி பவளக்கார தெரு, கொல்லம் பட்டறை தெரு, உழவர் சந்தை போன்ற பகுதிகளில், ஒரு மாதங்களாக வாறுகால் அடைத்து கழிவுநீர் செல்ல வழியில்லாமல்  தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் இந்த பகுதியில் உள்ள வீடுகளில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால்,  இப்பகுதியில், தொற்றுநோய் பரவும் அபாயத்தில் பொதுமக்கள்  உள்ளனர். கழிவுநீர்   உழவர் சந்தையை சுற்றிலும் தேங்கியுள்ளதால், காய்கறி வாங்க வரும் பொதுமக்கள்,  பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் உட்பட அனைவரும், கழிவு நீரில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும், துர்நாற்றம் வீசுவதோடு, தேங்கியுள்ள கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகின்றன. இதனால், இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. பரமக்குடியில்  பிரதான சாலைகளுக்கு  மட்டும் கவனம் செலுத்தும் துப்புரவு ஊழியர்கள், பிற பகுதிகளையும் சுத்தமாக வைத்திருக்கவும் கால்வாயை தூர்வாரி, கழிவுநீர் சீராக செல்ல, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கழிவுநீர் தேங்கி உள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்களின் சுகாதாரத்தை காக்க நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்….

The post பரமக்குடி நகர் பகுதியில் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்-நோய் அச்சத்தில் பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Paramakudi Nagar ,Paramakudi ,Pharamakudi ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் அருகே காட்டுப்பன்றி தாக்கி 2 இளைஞர்கள் படுகாயம்!!