×

பயனாளியிடம் ₹30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிமுக பெண் ஊராட்சி தலைவர் கைது: கணவரும் சிக்கினார்

சேத்துப்பட்டு, மே 5: சேத்துப்பட்டு அருகே கீழ்ப்பட்டு ஊராட்சியில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டி குடியேறிய பயனாளிக்கு வீட்டு வரி ரசீது வழங்க ₹30ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிமுக ஊராட்சி மன்ற தலைவியும், அவரது கணவர் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் கீழ்ப்பட்டு கிராமம் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் எம்ஜிஆர். நெசவு தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், எம்ஜிஆரும், சரஸ்வதியும் கூட்டாக சேர்ந்து கடந்த 2021ம் ஆண்டு சொந்த கிராமத்தில் காலி மனை வாங்கி அதில் வீடு கட்ட பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளியாக தேர்வு செய்யப்பட்டு, கடந்த 2022ம் ஆண்டு நம்பர் மாதம் வீடு கட்டி முடித்து குடியேறினர்.

இதற்கிடையே, தனது வீட்டிற்கு வரி செலுத்த அதிமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் வேண்டாமணி, அவரது கணவர் மணி ஆகியோரை அணுகிய போது ஏற்கனவே பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளியாய் தேர்வு செய்து வீடு கட்டியதற்கு எனக்கு எந்த பணமும் இதுவரை கொடுக்கவில்லை. மேலும், வீட்டு வரி ரசீது ஒரு கேடா எனக்கேட்டு ஊராட்சி மன்ற தலைவி வேண்டாமணி மற்றும் அவரது கணவர் மணி இருவரும் ₹30 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே எங்களால் வீட்டு வரி ரசீது கொடுக்க முடியும் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் மனவேதனைடைந்து லஞ்சம் கொடுக்க விரும்பாத எம்ஜிஆர், திருவண்ணாமலை விஜிலென்ஸ் டிஎஸ்பி வேல்முருகனிடம் புகார் மனு அளித்தார்.

இந்நிலையில், போலீசார் தெரிவித்தபடி, நேற்று காலை எம்.ஜி.ஆர், வயலில் வேலை செய்துகொண்டிருந்த தலைவர் வேண்டாமணி, அவருடன் இருந்த கணவர் மணி ஆகியோரிடம் பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மைதிலி, சப் இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத், செல்வராஜ், கமல், முருகன் மற்றும் காவலர்களுடன் ஊராட்சி மன்ற தலைவி மற்றும் அவரது கணவர் மணி ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர், சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து தொடர்ந்து, விசாரணை நடத்தினர். ஏற்கனவே, போளூர் ஒன்றியத்தில் எடப்பிறை ஊராட்சி மன்ற அதிமுக தலைவி ஜீவா கடந்த மாதம் தான் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து சேத்துப்பட்டு ஒன்றியத்தில் தற்போது ஊராட்சி மன்ற தலைவியும் அவரது கணவனும் கைது செய்யப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேத்துப்பட்டு அருகே கீழ்ப்பட்டு ஊராட்சியில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டுக்கு வரி ரசீது போட ₹30 ஆயிரம் லஞ்சம் வாங்கி சிக்கிய அதிமுக ஊராட்சி தலைவி வேண்டாமணி, கணவர் மணி.

The post பயனாளியிடம் ₹30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிமுக பெண் ஊராட்சி தலைவர் கைது: கணவரும் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,panchayat ,Sethupattu ,Kilpattu ,
× RELATED கருப்படிதட்டடை ஊராட்சியில் மாட்டு...