×

பனிப்பொழிவு, கார்த்திகை மாதம் என்பதால் விராலிமலை வார சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவு-வர்த்தகம் மந்தம்

விராலிமலை : விராலிமலை சுற்றுப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவு மற்றும் கார்த்திகை விரதமாதம் என்பதால்,விராலிமலையில் அதிகாலை தொடங்கிய வாரச் சந்தைக்கு ஆடுகளின் வரத்து குறைவானது. இதனால் வர்த்தகம் மந்தமான நிலையை எட்டியது.விராலிமலையில் வாரந்தோறும் திங்கட்கிழமை அதிகாலை நடைபெறும் ஆட்டு சந்தை அப்பகுதிகளில் மிகவும் பிரபலமாகும். பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆட்டு சந்தை வாரம் தோறும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு தொடங்கி 8 மணி வரை நடைபெறும். அதற்குள்ளாகவே ஆடுகள் வாங்குவதும் விற்பதும் என பெருமளவு வர்த்தகம் நடைபெற்று முடிந்து விடும். இந்நிலையில் கடந்த ஆண்டு விராலிமலை சுற்றுப்பகுதியில் பெய்த அடை மழையால் அப்பகுதியில் விவசாயிகளால் வளர்க்கப்பட்ட பெரும்பாலான செம்புலி மற்றும் வெள்ளாடுகள் குளிர் தாங்க முடியாமல் இறந்தன. இதனால் பெருமளவு உற்பத்தி தடைபட்டதோடு இன்றளவும் அந்த பாதிப்பு தொடர்கிறது. அதோடு கார்த்திகை சபரிமலை, பழனி கோயில்களுக்கு செல்ல பெரும்பாலோனர் விரதம் கடைபிடித்து வருவதால் இறைச்சி விற்பனை சரிவை கண்டுள்ளது. மேலும் கடும் பனிபொழிவு உள்ளிட்ட காரணங்களால் நேற்று காலை தொடங்கிய ஆட்டுச் சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது. சராசரி நாட்களில் ரூ.50 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரையும், விழா நாட்களில் ஒரு கோடியையும் தாண்டி வர்த்தகமாகும் இந்த சந்தையில் நேற்று வெறும் ரூ.20 லட்சம் கூட வர்த்தகம் ஆகவில்லை என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.எனவே, இந்நிலையை போக்க கால்நடை துறை அதிகாரிகள் ஆடு வளர்ப்பு விவசாயிகளுக்கு போதிய பயிற்சி அளிப்பதோடு, ஆடுகள் நோய்வாய்பட்டு இறப்பதை தடுக்கும் பொருட்டு அவ்வப்போது கால்நடை மருத்துவர்கள் ஆடு வளர்க்கும் விவசாயிகளை தேடிச் சென்று மருத்துவ சிகிச்சை அளித்து வந்தால் மட்டுமே வரும் காலங்களில் ஆடுகள் உற்பத்தியை பெருக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர்….

The post பனிப்பொழிவு, கார்த்திகை மாதம் என்பதால் விராலிமலை வார சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவு-வர்த்தகம் மந்தம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED அரசியல் ஆதாயத்துக்காக கொலை...