பந்தலூர் : பந்தலூர் அருகே டேன்டீ குடியிருப்பு பகுதியில் வீட்டின் கதவை உடைத்து அட்டகாசம் செய்த காட்டு யானையை கண்டு பச்சிளம் குழந்தையுடன் தொழிலாளி பின்வாசல் வழியாக தப்பி ஓட்டம் பிடித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே அரசு தேயிலைத்தோட்டம் டேன்டீ சரகம் 1 பகுதியில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ஒன்று தொழிலாளர் குடியிருப்புக்குள் புகுந்தது. அங்கு நடராஜ் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்த அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை தும்பிக்கையால் வெளியே இழுத்து சேதம் செய்தது. இதனால், வீட்டில் இருந்த நடராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியும் பீதியும் அடைந்தனர். இதைத்தொடர்ந்து, பச்சிளம் குழந்தையை தூக்கிக்கொண்டு பின்பக்க கதவு வழியாக தப்பி ஓடி அருகே உள்ள குடியிருப்புக்குள் புகுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இதையடுத்து இச்சம்பவம் குறித்து டேன்டீ நிர்வாகத்திற்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தகவல் கூறி நீண்ட நேரத்திற்கு பின்னரும் யாரும் சம்பவ இடத்திற்கு வராததால் தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. காட்டு யானைகளிடம் இருந்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அப்பகுதி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….
The post பந்தலூர் அருகே டேன்டீ தேயிலைத்தோட்ட குடியிருப்பில் புகுந்து காட்டு யானை அட்டகாசம்-பச்சிளம் குழந்தையுடன் தொழிலாளி தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.