குமாரபுரம்: சிதைந்துவரும் பத்மனாபபுரம்கோட்டை சுவரை தொல்லியல்துறை மூலம் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோதங்கராஜ் உறுதி அளித்துள்ளார்.பத்மனாபபுரத்தில் மூன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் திருவிதாங்கூர் மன்னர்கள் ஆட்சியின்போது கட்டப்பட்ட கலைநயமிக்க அரண்மனை உள்ளது. இது கேரள அரசின் கட்டுபட்டில் உள்ளது. இதன் வெளிபுறத்தில் உள்ள கோட்டை சுவர் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. 18 ஆயிரம் மீட்டர் நீளத்தில் உள்ள கோட்டை சுவர் மன்னர் மார்த்தாண்டவர்மா காலத்தில் 1744-ல் கட்டப்பட்டது. 20 அடி உயரம் கொண்ட சுவரின் கீழ்பகுதி நீளமான பாறாங்கற்களை கொண்டும் அதன்மேல் வெட்டுக்களாலும் கம்பீரமாக கட்டப்பட்டுள்ளது. கோட்டையின் முகப்பு பகுதியில் பெரியவாசலும், சுவரை சுற்றியுள்ள மற்ற பகுதிகளில் ஒன்பது சிறிய வாசல்களும் உள்ளன. எதிரி நாட்டு படைகள் தாக்காத வண்ணம் பாதுகாப்பு அம்சத்தோடு யானையும், மனிதர்களும் சேர்ந்து கட்டப்பட்ட கோட்டை சுவர் இப்போது அதன் பழைய கம்பீரத்தை இழந்து பரிதாபமாக காட்சி தருகிறது. சுவரின் கல் இடுக்குகளிலும், மேல்பகுதியிலும் மரம், செடிகள் வளர்ந்து சுவரின் பல பகுதிகளை பெயர்த்து வருகின்றன.இந்த நிலையில் கல்குளம் நீலகண்ட சுவாமி கோயில் திருப்பணி குறித்து ஆய்வு மேற்கொள்ள பத்மனாபபுரம் வந்த அமைச்சர் மனோதங்கராஜிடம் கோட்டை சுவரின் அவலம் குறித்து பொதுமக்கள் கூறினர். இதையடுத்து, அங்கிருந்தபடியே கோட்டை சுவர் எந்த துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை அறிய பல்வேறு துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், கோட்டை சுவர் ஒரு புராதன சின்னம். இதை தொல்லியல் துறை பராமரிப்பது தான் முறையாகும்.இது பொதுப்பணித்துறையிடம் இருந்தால் அத்துறையிடமிருந்து மாற்றி தமிழக தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கோட்டை சுவர் அதன் பழைமை மாறாமல் புனரமைக்கப்படும் என கூறினார்….
The post பத்மனாபபுரம் கோட்டை சுவர் பழமை மாறாமல் புனரமைக்கப்படும்: அமைச்சர் மனோதங்கராஜ் உறுதி appeared first on Dinakaran.