×

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு விராலிமலை இலுப்பூர், அன்னவாசல் பகுதி கோயில்களில் சிறப்பு வழிபாடு

விராலிமலை, ஏப்.6: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் பகுதி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விராலிமலை முருகன் மலைக்கோயிலிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நீண்ட வரிசையில் நின்று நேர்த்திகடன் நிறைவேற்றினர். மாதந்தோறும் வரும் உத்திர நட்சத்திரத்தை விட, பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக சிறப்புகள் உண்டு. பனிரெண்டாவது மாதமான பங்குனியும், பனிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் தான் பங்குனி உத்திரம் என்பதாகும். தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி மாதம் என்கின்றன வரலாற்று புராணங்கள். பங்குனி உத்திரத்தன்று கன்னிப்பெண்கள் கல்யாண விரதம் கடைபிடித்து அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம் கைக்கூடும் என்பது ஐதீகம்.

அந்த வகையில் விராலிமலை முருகன் மலைக்கோயில், மெய்க்கண்ணுடையாள் ஆலயம், வன்னி மரம், தெப்பகுளம் விநாயகர், இலுப்பூர் சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர், அன்னவாசல் தர்மசவர்த்தினி சமேத விருத்தபுரீஸ்வரர், குடுமியான்மலை அகிலாண்டேஸ்வரி சமேத சிகாபுரீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பங்குனி உத்திரம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விராலிமலை முருகன் மலைக்கோயிலிலுக்கு பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து நேர்த்திகடன் நிறைவேற்றினர். இதில் பெண்கள் கந்தசஷ்டி பாராயணம் செய்தனர், முருக பக்தர்களின் ஆன்மிக கீர்த்தனைகளுடன் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து மாலை மலைமேல் இருந்து இறங்கி வந்த வள்ளி, தேவசேனா சமேத கந்தர் தெப்பக்குளத்தில் நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் பங்கேற்று பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

The post பங்குனி உத்திரத்தை முன்னிட்டு விராலிமலை இலுப்பூர், அன்னவாசல் பகுதி கோயில்களில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Viralimalai Ilupur ,Annavasal ,Panguni Uthra ,Viralimalai ,Ilupur ,Viralimalai Murugan ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல்...