×

பங்குனி உத்திரத்தையொட்டிமுருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

கடலூர், ஏப். 5: பங்குனி உத்திரத்தையொட்டி முருகன் கோயில்களில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கடலூர் முதுநகர் அருகே வண்டிப்பாளையத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் சாமிக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், வீதி உலாவும் நடைபெற்று வந்தது. பங்குனி உத்திர திருவிழாவின், சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. நேற்று பங்குனி உத்திரத்தையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல கடலூர் வில்வராயநத்தத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் காவடி எடுத்து தென்பெண்ணை ஆற்றின் கரைக்கு புறப்பட்டனர். அங்கு காவடிகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பெண்ணை நதிக்கரையில் இருந்து காவடி எடுத்த பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலை அடைந்தனர். இதே போல கடலூர் மற்றும் சுற்றியுள்ள முருகன் கோயில்களில் நேற்று பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் வடக்கு கோபுரம் அருகே உள்ள சுப்ரமணியர் கோயிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. கீழவீதி தேரடி நிலையில் இருந்து தேர் புறப்பட்டு நான்கு வீதிகள் வலம் வந்து தேர் நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய திருவிழாவான தேர் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. தொடர்ந்து நேற்று அதிகாலையில் கோயிலில் இருந்து உற்சவ மூர்த்திகள் புறப்பட்டு விருத்தாசலத்தில் எழுந்தருள மணிமுக்தாற்றங்கரை தீர்த்த மண்டபத்தில் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அங்கு சிறப்பு அலங்காரத்தில் கொளஞ்சியப்பர் அருள்பாலிக்க வடக்கு கோட்டை வீதி, கிழக்கு கோட்டை வீதி, தென்கோட்டை வீதி, மேலக்கோட்டை வீதி வழியாக மீண்டும் கொளஞ்சியப்பர் கோயிலுக்கு சென்றடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மணிமுக்தாற்றில் இருந்து அலகிட்டு கொண்டும், பல்வேறு வகையிலான காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்து கொண்டு ஊர்வலமாக கொளஞ்சியப்பர் கோயிலுக்கு சென்று தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

தொடர்ந்து நேற்று மாலையில் கொளஞ்சியப்பருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதன் காரணமாக விருத்தாசலம் மற்றும் மணவாளநல்லூர் பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்றதால், இடையூறு ஏற்படாத வகையில் விருத்தாசலம் உள்ளே செல்லும் பேருந்துகள் மற்றும் வெளியே செல்லும் பேருந்துகளை மாற்று பாதையில் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து பங்குனி உத்திர திருவிழாவை கொண்டாடினர்.

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில்
உள்ள வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, மேல்பட்டாம்பாக்கம் முத்து மாரியம்மன் கோயிலில் அலங்கரிக்கப்பட்ட காவடி
மற்றும் பால்குடங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் அலகு குத்தியும், காவடி, பால்குடம் எடுத்தும் முக்கிய வீதியில் வழியாக ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

The post பங்குனி உத்திரத்தையொட்டி
முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை
appeared first on Dinakaran.

Tags : Murugan ,Panguni Uthra ,Cuddalore ,Panguni ,Uthra ,Swami ,
× RELATED கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!