×

நெல்லையில் இருந்து கேரளாவுக்கு மணல் கடத்த உடந்தையாக இருந்த கனிமவளத்துறை பெண் அதிகாரி கைது: முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் கலக்கம்

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் மணல் கடத்தல் தொடர்பாக அதே பகுதியை ேசர்ந்த கிறிஷ்டி என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி பொட்டல் கிராமத்தில் கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்ட பிஷப்புக்கு சொந்தமான எம் சாண்ட் குவாரிக்காக உரிமம் பெற்று, ஆற்று மணல் அள்ளி அனுமதியின்றி கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவ்வழக்கை முறையாக விசாரிக்கவில்லை. ஆகவே வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என தெரிவித்திருந்தார்.இம்மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. மேலும் இதுகுறித்து சேரன்மகாதேவி சப்.கலெக்டர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சேரன்மகாதேவியின் அப்போதைய சப்-கலெக்டர் பிரதீப் தயாள் ஆய்வு செய்து 27 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவிலான  ஆற்று மணல் கேரளாவுக்கு டாரஸ் லாரிகளில் கடத்தியதை கண்டுபிடித்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ரூ.9.50 கோடி அபராதம் விதித்தார். மேலும் துறைரீதியாக விசாரணை நடத்தி தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சப்.கலெக்டர் உத்தரவிட்டார்.இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் வழக்கை  விசாரித்து கேரள மாநிலம் பத்தினம் திட்டாவை சேர்ந்த மாவட்ட பிஷப் சாமுவேல் மாரி ஏரேனியஸ் (69), பாதிரியார்கள் ஜார்ஜ் சாமுவேல் (56), ஷாஜி தாமஸ் (58), ஜீஜோ ஜேம்ஸ் ( 37), ஜோஸ் சமகால (69), ஜோஸ் கலவியாஸ் (53) ஆகிய 6 பேரை கைது செய்தனர். சிபிசிஐடி போலீசார் மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இதில் அப்போதைய நெல்லை கனிமவளத்துறை உதவி இயக்குநராக இருந்த சபியா, மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி சிபிசிஐடி போலீசார் நேற்று காலை அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தற்போது சபியா நீலகிரி மாவட்டத்தில் கனிம வளத்துறை உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். ஏற்கனவே கல்லிடைக்குறிச்சி போலீசார் சபியாவின் கணவர் ஷமீர் உள்பட 23 பேரை கைது செய்துள்ளனர். இவர்களில் 11 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கனிமவளத்துறை உதவி இயக்குநர் சபியா, சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து மணல் கடத்தல் வழக்கு சூடு பிடித்துள்ளது.  இதனால், வழக்கில் தொடர்புடைய முக்கிய புள்ளிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்….

The post நெல்லையில் இருந்து கேரளாவுக்கு மணல் கடத்த உடந்தையாக இருந்த கனிமவளத்துறை பெண் அதிகாரி கைது: முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் கலக்கம் appeared first on Dinakaran.

Tags : Minerals Department ,Nellai ,Kerala ,Yesarantha Kristi ,Madurai High Court ,Ambasamudram ,Dinakaran ,
× RELATED கல்குவாரியை ஆட்சியர் ஆய்வு செய்து அறிக்கை தர ஐகோர்ட் கிளை ஆணை