×

நீண்ட நாளுக்கு பின் தூய்மை பணி தேனி புது பஸ்ஸ்டாண்ட் ‘க்ளீன்’

தேனி: தேனி நகருக்கான புதிய பஸ்நிலையம் தேனி நகர் பைபாஸ் ரோட்டில் வனத்துறைக்கு சொந்தமான சுமார் 7.35 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த 2006-2011ம் ஆண்டு நடந்த திமுக ஆட்சியின் போது, அப்போதைய துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டு, ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. பணிகள் முடிவடைந்த போது, அதிமுக தலைமையிலான அரசு பதவியில் இருந்ததால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. பஸ் நிலையத்தின் முன்புறம் குழந்தைகள் விளையாடுவதற்கான சிறுவர் பூங்கா உள்ளது. பஸ்ஸ்டாண்டிற்குள் ஓட்டல்கள், கடைகள் என சுமார் 64 கடைகள் அமைக்கப்பட்டன.  இப்புதிய பஸ் நிலையத்தில் இருந்து மூணாறு, குமுளி உள்ளிட்ட கேரள மாநில பகுதிகளுக்கும், கம்பம், போடியில் இருந்து திண்டுக்கல், மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர், நெல்லை, கன்னியாகுமரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் செல்லக்கூடிய பேருந்துகள் புறப்பட்டு செல்கிறது. இதன் காரணமாக தேனி புதிய பஸ் நிலையத்தில் பகல் மட்டும் இல்லாமல் நள்ளிரவு நேரத்தில் கூட பயணிகளின் கூட்டம் நிரம்பியே உள்ளது. கொரோனா பெருந்தொற்று காலம் முதலாக இப்புதிய பஸ்நிலையம் பராமரிப்பில் நகராட்சி அலட்சியப்போக்கை கடைபிடிக்கும் நிலை ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக புதிய பஸ்நிலையத்தில் உள்ள போர்டிகோ, பூங்கா பகுதி, பூங்கா பிளாட்பாரம், பஸ்நிலையத்திற்குள் உள்ள ஓடுதளம் ஆகிய பகுதிகளில் தூய்மை பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால் புதிய பஸ்நிலையத்தில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் நிறைந்து அசுத்தமாக சுகாதாரக்கேடாக காட்சியளித்தது.  இதனால் பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது. இதையறிந்த தேனி- அல்லிநகரம் நகராட்சியின் புதிய ஆணையர் வீரமுத்துக்குமார் தேனி புதிய பஸ்நிலையத்தில் உள்ள குப்பைகளை அகற்ற சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டார். அதன்படி, நேற்று தேனி புதிய பஸ்நிலையத்தில் குப்பைகள் அகற்றும் பணி நடந்தது. இதன் காரணமாக நீண்ட நாட்களுக்கு பிறகு புதிய பஸ்நிலையம் சுத்தமாக காட்சியளித்தது….

The post நீண்ட நாளுக்கு பின் தூய்மை பணி தேனி புது பஸ்ஸ்டாண்ட் ‘க்ளீன்’ appeared first on Dinakaran.

Tags : Theni Nagar ,Theni Nagar Bypass Road ,Dinakaran ,
× RELATED டிஒய்எப்ஐ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்