×

நில அபகரிப்பு வழக்குகள் குளறுபடி பிரச்னை வித்தியாசம் தெரியவில்லையா? உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: ‘தமிழகத்தில் நில அபகரிப்பு வழக்குகளின் குளறுபடிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் தான் முழு காரணம்,’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நில அபகரிப்பு தொடர்பான வழக்கு நீண்ட நாட்களாக  நிலுவையில் இருந்து வருவதாகவும், அந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு பிறப்பிக்கக் கோரியும் ஈரோட்டை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் நேற்றும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் கிருஷ்ணமூர்த்தி, ‘நில அபகரிப்பு தொடர்பான பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் விசாரணையில் உள்ளது. அப்படி இருக்கையில் சம்மந்தப்பட்டவர்கள் நேரடியாக நிவாரணம் கேட்டு உயர் நீதிமன்றத்தை நாடுகின்றனர். இதனால்தான், நில அபகரிப்பு தொடர்பான வழக்குகள் தொடர்ச்சியாக நிலுவையில் உள்ளன,’ என தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ராம்சங்கர், ‘உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் எந்த ஒரு உத்தரவையும் சென்னை உயர் நீதிமன்றமும். கீழமை நீதிமன்றங்களும் பின்பற்றுவது கிடையாது,’ என குற்றம்சாட்டினார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதி எம்.ஆர்.ஷா, ‘இரு தனிநபர்களுக்கு இடையேயான நில வழக்கு, உச்ச நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட பிறகும், அது தொடர்பான வழக்கு ஒன்றில் வெறும் முறையீட்டை மட்டும் ஏற்றுக் கொண்டு, நில அபகரிப்பு வழக்குகளை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இருந்த 782 வழக்குகளையும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் மாற்றியது ஏன்? இது போன்ற செயல்பாடுகள் ஏற்புடையது அல்ல. இந்த விவகாரத்தில் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உயர் நீதிமன்றம் ஏன் ரத்து செய்தது என்பதும் புரியவில்லை. நில அபகரிப்புக்கான சிறப்பு நீதிமன்றம் என்பது அது தொடர்புடைய வழக்குகளை மட்டுமே விசாரிக்கத்தான். மாஜிஸ்திரேட்  நீதிமன்றத்துக்கும், சிறப்பு நீதிமன்றத்துக்கும் வித்தியாசம் உள்ளது. அது கூடவா உயர்நீதிமன்ற பதிவாளருக்கு தெரியவில்லை? இதுபோன்ற செயல்பாடுகள் ஊழலுக்கு வழிவகுக்காதா?’ என சரமாரி கேள்வி எழுப்பினார். பின்னர், நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர். மேலும், சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட 782 வழக்குகள் தொடர்பான உத்தரவையும் நீதிபதிகள் ரத்து செய்தனர்….

The post நில அபகரிப்பு வழக்குகள் குளறுபடி பிரச்னை வித்தியாசம் தெரியவில்லையா? உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,High Court of Chennai ,Tamil Nadu ,Supreme ,High Court ,
× RELATED எதிர்கட்சிகளின் அழுத்தம், சுப்ரீம்...