×

இன்ஜினியரிங் சிறப்பு பிரிவு காலியிடங்களுக்கு ஜூலை 16ல் 2ம் கட்ட கலந்தாய்வு

சென்னை:இன்ஜினியரிங் சிறப்புப்பிரிவில் காலியாக உள்ள இடங்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு வரும் 16, 17ம் தேதிகளில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இன்ஜினியரிங் கலந்தாய்வை இணையதளம் மூலம் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டது.  இணையவழி கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுள்ள 1,04,453 பேருக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூன் 28ம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது.

ஜூலை 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை மாற்றுத்திறனாளிகள்,  முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கான சிறப்புப்பிரிவு கலந்தாய்வு நடந்தது.  அதில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் 143 இடங்களுக்கான கலந்தாய்வில் 67 பேர் மட்டுமே சீட் தேர்வு செய்திருந்தனர். விளையாட்டு வீரர்கள் பிரிவின்கீழ் 495 இடங்கள் உள்ள நிலையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களில் 283 பேர் மட்டுமே சீட் தேர்வு செய்தனர். முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் மீதமுள்ள இடங்களுக்கு தரவரிசைப்பட்டியலில் அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கு 16ம் தேதியும், விளையாட்டு வீரர்கள் பிரிவில் மீதமுள்ள இடங்களுக்கு விளையாட்டு வீரர் மதிப்பெண் பட்டியலில் அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கு 17ம் தேதியும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.13.35 கோடி ஒதுக்கீடு