×

நிமிர்ந்து நில் துணிந்து செல் திட்டம் மாணவிகளின் புகார் மீது கவனமுடன் நடவடிக்கை-ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்

கரூர் : நிமிர்ந்து நில் துணிந்து சொல் திட்டத்தின்கீழ் மாணவிகளிடம் இருந்து வரும் புகார் மனுக்கள் மீது கவனமுடன் நடவடிக்கை எடுக்க ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தினார்.கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நிமிர்ந்து நில் துணிந்து சொல் என்ற திட்டத்தின் மூலம் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட படிவங்களில் மாணவிகள் அளித்த புகார்களின் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும், வரும்காலங்களில் வரும் புகார்களுக்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில், மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேல் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளின் பாதுகாப்பிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிமிர்ந்து நில் துணிந்து சொல் என்ற திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து 201 பள்ளிகளில் 26085 மாணவிகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஏதேனும் பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தால் அதை பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாட்ஸ்அப் எண் மற்றும் இலவச தொலைபேசி எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தியும், இந்த விழிப்புணர்வு வகுப்புகளில் வழங்கப்பட்ட படிவங்களில் தங்களுடைய புகார்களை எழுதவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் 50 மாணவிகள் பல்வேறு வகையான பிரச்னைகள் உள்ளதாக தெரிவித்திருந்தனர்.அதன்படி வரப்பெற்ற புகார்களை மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் வைத்து மேல்நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும், வரும்காலங்களில் வரும் புகார்களுக்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை செய்யப்பட்டது.மேலும், கண்காணிப்பு குழு கூட்டத்தில் பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளிடம் இருந்து வரப்பெறும் புகார்கள் தொடர்பாக முறையாகவும், சட்ட விதிகளுக்கு உட்பட்டும் மிக கவனமுடனும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், நேர்முக உதவியாளர் சைபுதீன், முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார் மற்றும் மனநல மருத்துவர்கள் கலந்து கொண்டனர்….

The post நிமிர்ந்து நில் துணிந்து செல் திட்டம் மாணவிகளின் புகார் மீது கவனமுடன் நடவடிக்கை-ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Karur ,Dinakaran ,
× RELATED கரூர் மாநகர பேருந்து நிலையத்தில்...