×

நான்கு வழிச்சாலை பணிகளுக்காக கல்லறை தோட்டத்தை இழந்த கேப்ரனூர் மக்கள்: மாற்று இடம் வழங்க கோரிக்கை

மானாமதுரை: மதுரை – ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை பணிகளுக்காக குடியிருப்புகளை இழந்த கேப்ரனூர் கிராமத்தினருக்கு இறந்தவர்களை புதைக்கும் கல்லறை இடமும் பறிபோனது. ஐந்து ஆண்டுகளாக மாற்று இடம் வழங்காமல் இருப்பதால் இந்த பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரியுள்ளனர்.மதுரை – ராமேஸ்வரம் தேசியநெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றி அமைக்கும் பணி கடந்த 2015ம் ஆண்டு துவங்கியது. மானாமதுரை ஆனந்தபுரம் பைபாஸ் ரோட்டில் இருந்து அன்னவாசல் விலக்குரோடு வரை சாலையின் இருபுறமும் உள்ள நிலங்கள், வீடுகள், கடைகள் கையகப்படுத்தப்பட்டு அவர்களுக்கு இழப்பீடும் வழங்கப்பட்டது.மானாமதுரை புறநகர் பகுதியான கேப்ரனூர் கிராமத்தில், 280 குடும்பங்கள் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் வசித்து வந்தனர். இந்த இடத்தில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம், தேவாலயம், விளையாட்டு மைதானத்தை ஒட்டியுள்ள இடங்களை கையகப்படுத்தி சாலை அமைக்கப்பட்டது.இதன்படி இங்கு வசித்தவர்களில் ஒருசிலருக்கு சிப்காட் அருகே மாற்று இடம் வழங்கப்பட்டது. ஆனால் கல்லறைத்தோட்டம் இருந்த இடத்திற்கு பதில் மாற்று இடம் வழங்கப்படவில்லை. சாலை அமைக்கும்போது பிரச்னை ஏற்படாமல் இருக்க கிராமத்தின் வடக்கு பகுதியில் கீழப்பசலை கால்வாய் இருந்த இடத்தை நிரப்பிய நெடுஞ்சாலைத்துறையினர் அந்த இடத்தில் கிறிஸ்தவர்களுக்கான கல்லறை அமைத்து கொள்ளுமாறு கூறியிருந்தனர். ஆனால் அந்த இடம் விவசாய பணிகளுக்கு செல்லும் பாதை என சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து கலெக்டர் மற்றும் நான்கு வழிச்சாலை ஆணையத்திடம் கிராமத்தினர் புகார் மனு கொடுத்தனர். ஆனால் அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதுகுறித்து கேப்பர்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், கிறிஸ்தவ மக்களான எங்களுக்கு 1931ம் ஆண்டு வெள்ளைக்காரர் கேப்ரன் என்பவரால் எங்களது முன்னோர்களுக்கு வீடு, பள்ளி, தேவாலயம் ஆகியவை கட்டித்தரப்பட்டன. அவரது நினைவாக இந்த ஊர் கேப்ரன்பட்டினம் என்று அழைக்கப்படுகிறது. தற்போது இங்கு 280 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்கு அங்கன்வாடி கட்டிடம், விளையாட்டு மைதானம், மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளிட்டவை கட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் நான்கு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்படும்போது இங்கிருந்த 83 வீடுகள் இடிக்கப்பட்டன. வீடுகளை இழந்த பலருக்கு நிரந்தரமாக மாற்று இடம் வழங்கப்படவில்லை.மேலும் கல்லறைதோட்டத்திற்கு என இதுவரை நிலம் ஒதுக்கப்படவில்லை. இதனால் எங்கள் கிராமத்தில் இறப்பவர்களை மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் உள்ள சிஎஸ்ஐ கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்துவருகிறோம். எங்கள் கிராமத்தில் இருந்து தற்போதைய கல்லறை தோட்டம் வெகுதொலைவில் உள்ளதால் அமரர் ஊர்தியில் எடுத்து செல்லவும், உறவினர்களை வாகனங்களில் அழைத்து செல்லவும் அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது. எனவே எங்களுக்கு கல்லறை தோட்டம் அமைக்க எங்கள் கிராமத்தின் அருகே உள்ள புறம்போக்கு நிலத்தை ஒதுக்கி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்….

The post நான்கு வழிச்சாலை பணிகளுக்காக கல்லறை தோட்டத்தை இழந்த கேப்ரனூர் மக்கள்: மாற்று இடம் வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Capranur ,Manamadurai ,Kapranur ,Madurai-Ramanathapuram ,
× RELATED 15 வயது மகள் காதல் கண்டித்த தந்தை கொலை: காதலன், நண்பர் கைது