×

நாடகம் எடுபடாது

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் உள்பட பல்வேறு மக்களை பாதிக்கும் சட்டங்களுக்கு அதிமுக அரசு ஆதரவு அளித்ததை மக்கள் மறந்து விடவில்லை. தமிழக சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்கு நல்லது செய்தது போல் நடிக்கும் ஆளுங்கட்சியினரின் நாடகத்தை மக்கள்  நம்பமாட்டார்கள். ‘‘தேர்தல் நேர மறதி’’ என்பது ஆளுங்கட்சிக்கு இருக்கலாம். ஆனால், மக்கள் தெளிவாக உள்ளனர். அவர்களை ஏமாற்ற முடியாது.தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவை ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்த்து உள்ளது. குடிமராமத்து பணிகள் மற்றும் டெண்டர் ஆகியவற்றில் ஊழல் தலைவிரித்து ஆடியுள்ளது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டுள்ளன. வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கும் தமிழகத்தை மீட்பதற்கான கடைசி தருணம் இது.  பால், முட்டை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வை குறைக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?காஸ் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. காய்கறிகளின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால், மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். முக்கியமாக, மக்களிடம் வருமானம் இல்லை, பணப்புழக்கம் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். ஆட்சியில் இருந்த போது, மக்களின் துயரங்களை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்து விட்டு, தேர்தலை கருத்தில் கொண்டு, மக்களின் மீது திடீர் பாசம் காட்டுவது ஏன்? ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகி விட்டனர் என்பதை ஆட்சியாளர்களும் உணர்ந்திருக்கிறார்கள்.தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. படித்தவுடன் வேலை கிடைப்பது என்பது இயலாத காரியமாக மாறியுள்ளது. படித்தவுடன் வேலை கிடைக்கவில்லை என்றால், சமூகத்தில் குற்றச்செயல்கள் தலைதூக்கும். ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழர்களுக்கான வாய்ப்புகள் பறிக்கப்பட்டு வருகிறது. தமிழக மின்வாரியத் துறையிலேயே தமிழர்களுக்கான இடங்கள் பறிக்கப்படுவது பேரவலம். இந்த நிலை தொடர்ந்தால், தமிழக இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பதை அழுத்தமாக புரிந்து கொள்ளவேண்டும். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில், தமிழக அரசு அக்கறை காட்டுவது கிடையாது.தேர்தலில் மாற்றத்தை மக்களால் மட்டுமே உருவாக்க முடியும். பணம் மூலம் வாக்காளர்களை கவர்ந்து விடலாம் என ஆளுங்கட்சியினர் எண்ணுகின்றனர். ஜனநாயகத்தில் மக்கள் தான் மாபெரும் சக்தி. அவர்களை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆட்சி மாற்றத்தை நோக்கி மக்கள் பயணிக்க தொடங்கி விட்டனர். சுகாதாரம், வேலைவாய்ப்பு, அடிப்படை கட்டமைப்பு வசதி, அறிவியல், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு வசதிகளை தமிழக அரசு உருவாக்கியிருக்க வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் வரக்கூடிய பல பிரச்னைகளுக்கு ஓரளவு முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஆனால், நிகழ்காலத்தில்கூட மக்களுக்கு தேவையான எவ்வித அடிப்படை வசதிகளையும் உருவாக்கவில்லை என்பதுதான் வேதனைக்குரியது. இதனால் அடுத்த தலைமுறை கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அரசு அளித்த அலட்சிய பதில் மற்றும் சாத்தான்குளம், பொள்ளாச்சி உள்ளிட்ட தமிழகத்தை உலுக்கிய பல்வேறு கொடிய சம்பவங்களை ஆட்சியாளர்கள் மறந்திருக்கலாம். ஆனால், மக்கள் மறக்கவில்லை. மத்திய, மாநில அரசுகளின் தேர்தல் நாடகம், மக்களிடம் எடுபடாது….

The post நாடகம் எடுபடாது appeared first on Dinakaran.

Tags :
× RELATED மத்திய அரசு நிதி வழங்காததால் சென்னை...