×

நத்தம் பகுதியில் மாந்தோப்புகளில் புழு தாக்குதல்-மகசூல் பாதிக்கும் என விவசாயிகள் கவலை

நத்தம் : நத்தம் பகுதியில் மாந்தோப்புகளில் பூக்களில் புழு தாக்குதல் ஏற்பட்டுள்ளதால், மகசூல் பாதிக்கும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் காசம்பட்டி, பரளி, ரெட்டியபட்டி, இடையபட்டி, குட்டுப்பட்டி, துவராபதி, சேர்வீடு புன்னப்பட்டி, சமுத்திராப்பட்டி, சிறுகுடி, ஊராளிபட்டி, மணக்காட்டூர், கோசுகுறிச்சி, செந்துறை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில், 10 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் மாந்தோப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தில் மா சாகுபடி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மா மரங்கள் மகசூல் தரும். மா மரங்களில் மார்கழி மாதம் தொடங்கி மாசி மாதம் வரை மருந்து தெளிக்கும் பணி நடைபெறும். கடந்த சுமார் 10 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், பெரும்பாலான தோப்புகளில் மா மரங்கள் பட்டுப்போய் விட்டன. இதனால், மா மரங்களிலிருந்து பெற்று வந்த மகசூலும் குறைந்துள்ளது.   இந்த ஆண்டும் தொடர்ந்து பெய்த கனமழையால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததுடன் மரங்கள் பசுமையுடன் காணப்பட்டது. எனவே, இந்த ஆண்டு மா மகசூல் நன்றாக இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். இதைதொடர்ந்து கடந்த மார்கழி மாதம் முதல் மாமரங்களில் பூக்கள் பூப்பதற்கு மருந்து தெளிக்கப்பட்டது. இதனால், இப்பகுதியில் பெரும்பாலான மரங்கள் பூக்கள் பூத்திருந்த நிலையில், அவற்றிலிருந்து புழுக்கள் உருவாகி மரங்களில் பூத்த பூக்கள் கருகிய நிலையில் கொட்டியதுடன் தேன் ஒழுகல் என்ற நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனால், மரங்களில் அதிகம் பிஞ்சு பிடிக்க வேண்டிய நிலையில் பிஞ்சுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மரங்களில் காணப்படுகிறது. இதனால், மகசூல் பாதிக்கும் நிலை காணப்படுகிறது. மேலும் சில மரங்களில் பூக்கள் கருகிய நிலையில் சில மரங்கள் ஆங்காங்கே பூத்து இளம் பூக்களாகவும் ஒருசில மாமரங்களில் காணப்படுகிறது. இந்த பூக்கள் பலனுக்கு வருமா என்ற சந்தேகமும் விவசாயிகளிடம் மேலோங்கியுள்ளது. இது குறித்து மா விவசாயி சித்திக் என்பவர் கூறுகையில், ‘கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பருவமழை காலங்களில் போதிய மழை பெய்தது. இதனால், மாமரங்கள் பசுமையுடன் காணப்பட்டது. இந்த சூழ்நிலையில் மாமரங்களில் மகசூல் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. கடந்த 3 மாதங்களாக மரங்களில் பூக்கள் பூப்பதற்கும், பூத்த பூக்களில் பிஞ்சுகள் பிடிப்பதற்கும் மருந்துகள் தெளிக்கப்பட்டது. இந்நிலையில், பூத்த பூக்களில் தேன் ஒழுகல் ஏற்பட்டு பூத்த பூக்கள் கருகி கொட்டியதுடன் மரங்களில் பிஞ்சுகளும் அதிகம் பிடிக்காமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படுகிறது. எனவே, இந்த ஆண்டு மாமரங்களிலிருந்து கிடைக்கும் மகசூல் பாதிக்கும் அபாயம் உள்ளது. தற்சமயம் ஒருசில மரங்களில் இளம் பூக்கள் இப்போததான் பூத்து வருகிறது. எனவே, சம்மந்தப்பட்ட வேளாண்மை துறையினர் மாமரங்களை களத்திற்கு சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குவதுடன், இதை கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப வழிமுறைகளை வழங்க வேண்டும். பாதிப்பு அதிகம் ஏற்படும் பட்சத்தில் நிவாரண உதவிகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்….

The post நத்தம் பகுதியில் மாந்தோப்புகளில் புழு தாக்குதல்-மகசூல் பாதிக்கும் என விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Natham ,Dinakaran ,
× RELATED குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை