×

நத்தத்தில் இடிந்து விழும் அபாயத்தில் மின்வாரிய அலுவலகம்-மழைநீர் புகுந்து ஆவணங்கள் சேதம்

நத்தம் : நத்தத்தில் தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலருக்கான கட்டிடமும், மின்வாரிய அலுவலக வளாகத்தில் இருந்து வருகிறது. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நத்தம், வே.குரும்பபட்டி, எல்.வலையபட்டி, செந்துறை உள்ளிட்ட மின்நிலையங்கள் உள்ளன. இதற்கான ஆவணங்கள் இங்கு வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. உதவி செயற்பொறியாளர் இயக்குதலும், பேணுதலும் அலுவலகம் கட்டப்பட்டு பல வருடங்களாக இங்கு இருந்து இயங்கி வருகிறது. இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மின்துறை சம்மந்தமான பிரச்னைகளுக்கு இந்த அலுவலகத்தில் உள்ள அலுவலரை சந்திக்க அடிக்கடி வந்து போகும் இடமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அங்குள்ள கான்கிரீட் கூரை மேல் உள்ள சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து அவற்றின் உள்ளே உள்ள கம்பிகள் நீட்டிக் கொண்டு காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் சாதாரண மழை பெய்தால் கூட கான்கிரீட் மேற்கூரையின் மூலம் நீர் கசிந்து உள்ளே ஒழுகுகிறது. மேலும் பக்கவாட்டில் உள்ள ஜன்னல்களும் சேதமடைந்து உள்ளதால் அவற்றின் வழியாக சாரல் மழை உள்ளே புகுந்து விடுகிறது. இதனால் ஆவணங்களை பாதுகாப்பதிலும், அங்குள்ள கணினிகளை பாதுகாப்பதும் சிரமமாக உள்ளது. அங்குள்ள அலுவலர்களும், பணியாளர்களும் அந்த அறைகளிலேயே பாதுகாப்பின்றி பணி புரிந்து வருகின்றனர். ஏனெனில் மழை, காற்று போன்றவற்றின் போது மேற் கூரையில் கான்கிரீட் மேல் பூசப்பட்ட சிமெண்ட் பூச்சுகள் அவ்வப்போது பெயர்ந்து விழும் அபாயமும் நிலவுகிறது. இதனால் அங்கு பணிபுரிபவர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வேலை செய்யும் நிலையில் உள்ளனர். மேலும் அங்கு வந்து செல்லும் பொதுமக்களும் அச்சத்துடன் சென்று வரும் நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் செயற்பொறியாளர் வாகனம் நிறுத்தும் இடம் மட்டுமின்றி அனைத்து கட்டிடங்களும் சேதமடைந்த நிலையில் உள்ளதால் மழைக்கு சுவர்களில் நீர் இறங்கி எந்நேரம் இடிந்து விழுமோ என்ற அச்சம் மேலோங்கி காணப்படுகிறது. எனவே,  மின்துறை நிர்வாகம் தக்க நடவடிக்கை மேற்கொண்டு சேதமடைந்து காணப்படும் பழமையான உதவி செயற்பொறியாளர் அலுவலக கட்டிடம் முழுவதையும் இடித்து அப்புறப்படுத்தி புதிய கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதியை மக்கள் கூறியதாவது: அலுவலர்கள், பணியாளர்கள் பணிபுரிவதற்கும், பொதுமக்கள் வந்து போவதற்கும் அச்சத்துடன் காணப்படும் பழைய சேதமடைந்த நத்தம் மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் அலுவலக கட்டிடங்களை அப்புறப்படுத்தி புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மழை, புயல் போன்ற நேரங்களில் அவை இடிந்து விழ வாய்ப்பு உள்ளது என்றனர். …

The post நத்தத்தில் இடிந்து விழும் அபாயத்தில் மின்வாரிய அலுவலகம்-மழைநீர் புகுந்து ஆவணங்கள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Electropower Office ,Rainwater ,Natham ,Tamil Nadu Electrical Assistant Engineer Office ,Nathatham ,Dinakaran ,
× RELATED குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை