×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆர்வத்துடன் வாக்களித்த தலைவர்கள், பிரபலங்கள்

* மக்களோடு மக்களாக வரிசையில் நின்றனர்* ஓட்டுபோட்டு ஜனநாயக கடமையை ஆற்றினர்சென்னை: தமிழகத்தில்  திட்டமிட்டபடி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று  காலை 7 மணிக்கு தொடங்கியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 9.30 மணியளவில் தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் உள்ள வாக்குசாவடியில் தனது வாக்கினை  பதிவு செய்தார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலினும் வந்தார். அப்போது, வாக்குச்சாவடியில், பொதுமக்களுடன் வரிசையில்  சுமார் 15 நிமிடம் காத்திருந்து தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக  கடமையாற்றினார்.தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள எட்வர்டு பள்ளியில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்துடன் வாக்களித்தார். வேலூர் மாநகராட்சி காட்பாடி டான்பாஸ்கோ பள்ளி வாக்குச்சாவடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், எம்பியுமான கதிர் ஆனந்த் ஆகியோர் வாக்களித்தனர். திருச்சியில்  அமைச்சர் கே.என்.நேரு, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி, திண்டுக்கல்லில்  அமைச்சர் ஐ.பெரியசாமி, குன்றத்தூரில் தாமோ.அன்பரசன், திருப்பூரில்  சாமிநாதன், கிண்டியில் மா.சுப்பிரமணியன், துறைமுகத்தில் பி.கே.சேகர்பாபு, திருச்சி  மகேஷ் பொய்யாமொழி, புதுக்கோட்டையில் ரகுபதி, சிவ.மெய்யநாதன், ஆவடியில்  சா.மு.நாசர், செஞ்சியில் மஸ்தான், தூத்துக்குடியில் கீதாஜீவன், மதுரையில்  பி.மூர்த்தி, தாராபுரத்தில் கயல்விழி செல்வராஜ் மற்றும் அமைச்சர்கள்  தங்களது மாவட்டங்களில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில்  வாக்களித்தனர்.திண்டிவனம் தாகூர் பள்ளி ஓட்டுச்சாவடியில் பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்களித்தார். இதேபோன்று, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது  மாவட்டங்களில் வாக்களித்தனர். அதன்படி, ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,  சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அடையாறில் உள்ள வாக்குச்சாவடியில் டிடிவி.தினகரன், ஆழ்வார்பேட்டை பீமன் தோட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் ஜி.கே.வாசன், அரும்பாக்கம் தனியார் பள்ளியில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் வி.கே.சசிகலா, கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், மந்தைவெளியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் வாக்களித்தனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 19வது வார்டு தாகூர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பாமக இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி தனது குடும்பத்தினர் உடன் வந்து வாக்களித்தனர்.சென்னை ஆலப்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், வளசரவாக்கம் லட்சுமி நகரில் உள்ள தனியார் பள்ளியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், ேதனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் வாக்களித்தார். இதேபோன்று, சாலிகிராமத்தில் உள்ள  காவேரி பள்ளியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது வாக்கினை  செலுத்தினார். இதேபோல், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியில் வாக்களித்தார். தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பிரபாகர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் தனது வாக்குகளை பதிவு செய்தனர்.விருகம்பாக்கத்தில்  உள்ள வாக்குச்சாவடி மையத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி  குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். முகப்பேரில்  உள்ள வாக்குச்சாவடி மையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு, கானாத்தூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பளியில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜூவால் வாக்களித்தார். திமுக வெற்றி உறுதி: கனிமொழி எம்.பி பேட்டிதிமுக எம்.பி கனிமொழி சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அப்பாஸ் பள்ளியில் வாக்களித்த பிறகு நிருபர்களிடம் கூறியதாவது: நான் பிரசாரத்திற்கு சென்ற அளவில் ஏராளமான மக்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மக்கள் எழுச்சியாக, மகிழ்ச்சியாக உள்ளனர். திமுக மீதும், முதல்வர் மீதும் வைத்துள்ள நம்பிக்கை என்பது மிகப்பெரிய அளவில் உள்ளது. இந்த தேர்தலில் நிச்சயம் திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். இவ்வாறு பேசினார்….

The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆர்வத்துடன் வாக்களித்த தலைவர்கள், பிரபலங்கள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Local Government ,Tamil Nadu ,
× RELATED சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் மின்வெட்டு: ஓபிஎஸ் வலியுறுத்தல்