×

நகரங்களில் குப்பை கொட்டும் இடங்களில் பசுமை மண்டலம்: பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: ‘நகர்புறங்களில் குப்பை கொட்டும் இடங்களை பசுமை மண்டலமாக மாற்றுவதற்கு  திட்டமிடப்பட்டு உள்ளது,’ என்று  பிரதமர் மோடி தெரிவித்தார்.விவசாய பணிகளுக்கு டிரோன்களை பயன்படுத்தும், ‘கிசான் டிரோன்’ திட்டத்தை பிரதமர் மோடி நேற்று காணொலி மூலமாக தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ‘‘ஒன்றிய பட்ஜெட் மற்றும் கொள்கை உருவாக்கங்களில் தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.  சில ஆண்டுகளுக்கு முன்பு வரை டிரோன்கள் பெரும்பாலும் பாதுகாப்பு  துறை சார்ந்ததாகவே இருந்தது. 21ம் நுாற்றாண்டில் நவீன விவசாய வசதிகளை வழங்குவதில் டிரோன்கள் புதிய அத்தியாயமாக மலர்ந்துள்ளது. இது, டிரோன் துறை வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாக மட்டுமின்றி, அதிகளவில் புதிய வாய்ப்புக்களையும் உருவாக்கும். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களான பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை குறுகிய நேரத்தில் சந்தைகளுக்கு எடுத்து செல்வதற்கு, அதிக திறன் கொண்ட ஆளில்லாத விமானங்களை பயன்படுத்தலாம். இதன் மூலம், விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்,’’ என்று தெரிவித்தார். மத்திய பிரதேச மாநிலம், இந்துாரில் கழிவுகளில் இருந்து பயோகாஸ் உற்பத்தி செய்வதற்கான ஆலையையும் மோடி  காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார். ரூ.150 கோடி செலவிலான இது, ஆசியாவின் மிகப்பெரிய  பயோகாஸ் ஆலை என்ற பெருமையை பெற்றுள்ளது. இதை தொடங்கி வைத்து அவர் பேசுகையில், ‘‘நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் தினமும் லட்சக்கணக்கான டன்  குப்பைகள் திறந்த வெளியில் கொட்டப்படுகின்றன. இதன்மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு வியாதிகள் ஏற்படுகிறது. இதை தடுக்கவே, ஸ்வச் பாரத் 2ம் கட்ட திட்டத்தில்  இப்பிரச்னைக்கு  தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகர்புறங்களில் உள்ள சில இடங்கள் பல ஆண்டுகளாக குப்பை கொட்டும் இடங்களாக இருந்து வருகின்றன. அந்த  இடங்களை பசுமை மண்டலமாக  மாற்றுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு மாநில அரசுக்கு அனைத்து உதவிகளையும் ஒன்றிய அரசு செய்யும்,’’ என்றார்.ஆப்கான் சீக்கியர்களுடன் சந்திப்புஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் விலகிக் கொண்டது. அதன் பிறகு  அங்கு தலிபான்கள் ஆட்சி அமைத்துள்ளனர். இந்நிலையில், இந்த நாட்டை சேர்ந்த சீக்கியர்கள், இந்துக்கள் அடங்கிய துாதுக்குழு மோடியை டெல்லியில் நேற்று சந்தித்து பேசியது. பஞ்சாப்பில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் நிலையில், நேற்று முன்தினம் நாட்டின் முக்கிய சீக்கிய தலைவர்களுக்கு மோடி விருந்து அளித்தார். அதேபோல், ஆப்கான் சீக்கியர்கள் நேற்று அவரை சந்தித்து இருப்பதும், பஞ்சாப் தேர்தலில் பாஜ.வுக்கு ஆதரவு திரட்டும் உத்தியாக கருதப்படுகிறது….

The post நகரங்களில் குப்பை கொட்டும் இடங்களில் பசுமை மண்டலம்: பிரதமர் மோடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,New Delhi ,Green Zone ,Dinakaran ,
× RELATED சிறுகுறு தொழில்கள் அழிந்துவிட்டன;...