×

தொடர்மழை காரணமாக 137 அடியை நெருங்குகிறது பெரியாறு அணை: நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்த விவசாயிகள் கோரிக்கை

கூடலூர்: பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததால், நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு அணையின் நீர்மட்டம் 136 அடியாக உயர்ந்தது. நேற்று காலை விநாடிக்கு 5,250 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. எனவே நேற்று மாலை வரை அணையின் நீர்மட்டம் கூடுதலாக 0.85 அடி மட்டுமே உயர்ந்தது. 152 அடி உயரமுள்ள பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 136.85 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,250 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 2,200 கனஅடி வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 6,320 மில்லியன் கன அடியாக உள்ளது. பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கும் தண்ணீரின் அளவை குறைத்து, நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தினர் கூறுகையில், ‘‘கேரளத்தின் மத்திய மாவட்டங்களில் தொடர்ந்து மழை நீடிக்கும் நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்குள் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. வைகை அணையில் போதிய நீர் இருப்பு உள்ளது. மூல வைகையில் இருந்தும், கொட்டக்குடி ஆற்றில் இருந்தும் வைகைக்கு 1,300 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. எனவே உடனடியாக பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை 500 கன அடியாக குறைக்க வேண்டும். பெரியாறு அணை விவகாரத்தில் கேரள தரப்பில் இருந்து டாக்டர் ஜோசப் மற்றும் ரசூல்ராய் போன்றவர்கள் செய்து வரும் விஷம பிரசாரத்தை முடிவுக்கு கொண்டுவர நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு தேனி மாவட்ட நிர்வாகம் ஆவண செய்ய வேண்டும்’’ என்றனர்.தமிழக அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆய்வுபெரியாறு அணை நீர்மட்டம் நேற்று 136.80 அடியை கடந்த நிலையில் இடுக்கி மாவட்ட வருவாய் அதிகாரி ஷாஜி, மூணாறு துணை தாசில்தார் கீதாகுமாரி உள்ளிட்ட அதிகாரிகள் அணையில் திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வுக்காக இவர்கள் தேக்கடி படகுத் துறையில் இருந்து கேரள வனத்துறையின் ஸ்பீடு போட்டில் அணைக்கு கிளம்பிச் சென்றனர். இது குறித்து தமிழக அதிகாரிகளிடம் அனுமதி பெறவோ, தெரிவிக்கவோ இல்லை. முன்னதாக கரையோர பகுதியில் வசிக்கும் மக்களை சந்தித்து பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டால், பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி தெரிவித்துள்ளனர்.கேரளாவிற்கு செல்லும் வழிகள் நவ.1ல் முற்றுகைபெரியாறு அணை குறித்து கேரளாவில் விஷம பிரசாரம் செய்து வருவதை கண்டித்து தேனி மாவட்டம், கம்பத்தில் நேற்று ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப்பின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், ‘‘கடந்த வாரம் கேரளா மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது இந்தியாவிலேயே முதல் ஆளாக தமிழக முதல்வர்தான் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கி இருக்கிறார். தமிழகம் இப்படி தாயுள்ளத்தோடு நடந்து கொள்ளும்போது கேரளா முழுவதும் தமிழகத்திற்கு எதிரான விஷம பிரசாரம் பரப்பப்பட்டு வருகிறது. விஷம பிரசாரங்களை நிறுத்தாவிட்டால், தமிழ்நாடு உருவான நாளான நவ. 1ம் தேதி தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் மார்த்தாண்டம், செங்கோட்டை, குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு, நீலகிரி சாலை, வாளையார் சோதனைச்சாவடி ஆகிய 7 வழிகளையும் ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் முற்றுகையிடும். இதற்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களையும் விவசாய சங்கங்களையும் சந்திக்க உள்ளோம்’’ என்றார்….

The post தொடர்மழை காரணமாக 137 அடியை நெருங்குகிறது பெரியாறு அணை: நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்த விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Periyar dam ,Kudalur ,
× RELATED முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை...