×

தேர்தல் நேரத்தில் அரசியல் காரணத்துக்காக 10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு கொண்டு வந்ததால் ரத்து நிலை: அமைச்சர் துரைமுருகன் அறிக்கை

சென்னை: தேர்தல் நேரத்தில் அரசியல்  காரணங்களுக்காக அவசர கோலத்தில் 10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதால்தான்  உச்ச நீதிமன்றத்தால் இச்சட்டம் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். இதுகுறித்து, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், வன்னியர் உள்ளிட்ட சில சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று (நேற்று) தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. எந்த ஒரு பிரிவினருக்கும் உள்ஒதுக்கீடு வழங்கிட மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், இந்த சிறப்பு ஒதுக்கீட்டிற்கு அடிப்படையான தரவுகள் சரியாக இல்லை என்றும், இதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் சரியான ஆதாரங்களின்றி வழங்கப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில், கலைஞர் கொண்டு வந்த, அருந்ததியினர் மற்றும் இஸ்லாமியருக்கான உள்ஒதுக்கீட்டு முறைகள் அனைத்திற்கும் சரியான ஆதாரங்களின் அடிப்படையில் சட்டங்கள் முறையாக இயற்றப்பட்டதால், அனைத்து நீதிமன்றங்களாலும் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ்நாட்டில் சமூகநீதி நிலை நாட்டப்பட்டுள்ளதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.ஆனால், முந்தைய அதிமுக ஆட்சியில், தேர்தல் நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக அவசர கோலத்தில் அள்ளித்தெளித்தது போல சரியான அடிப்படைத் தரவுகள் இன்றி இந்த சிறப்பு ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதால் தான் உச்ச நீதிமன்றத்தால் இச்சட்டம் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது. முதல்வர் அறிவுறுத்தியபடி மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, இந்த வழக்கு தொடர்பாக அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு முழுமூச்சுடன் மேற்கொண்டும், இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களிடம் தீவிரமாக கலந்தாலோசித்து தமிழக அரசு முடிவு எடுக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post தேர்தல் நேரத்தில் அரசியல் காரணத்துக்காக 10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு கொண்டு வந்ததால் ரத்து நிலை: அமைச்சர் துரைமுருகன் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Minister ,Thuraymurugan ,Chennai ,Supreme Court ,Emergency Kolam ,
× RELATED சிறு வணிக கட்டிடங்களுக்கு கட்டட முடிவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு