×
Saravana Stores

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் சிவகாசியில் பட்டாசு வாங்க குவியும் வெளியூர் மக்கள்.!

சிவகாசி: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் பட்டாசு வாங்க ஏராளமானோர் வாகனங்களில் சிவகாசியில் குவிந்து வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் சிவகாசியில் பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது. சிவகாசிக்கு நேரடியாக வந்து பட்டாசு வாங்கினால் 35 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என்பதால் பெரும்பாலான பட்டாசு பிரியர்கள் சிவகாசிக்கு நேரடியாக வந்து பட்டாசு வாங்கி செல்கின்றனர். இதனால் சிவகாசி, திருத்தங்கல் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசு கடைகளில் பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது. வெளி மாநிலங்களுக்கு 90 சதவீத பட்டாசுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னை, கோவை, திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு கடைகளுக்கு பட்டாசு அனுப்பும் பணியில் சிவகாசி பட்டாசு ஆலைகள் மும்முரமாக உள்ளன. பட்டாசு வாங்க நூற்றுக்கணக்கானோர் வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களில் சிவகாசி வருகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தீபாவளி வரை சிவகாசியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக சிறப்பு காவல்படையில் இருந்து 12 பேர், சாத்தூர், விருதுநகர், திருவில்லிபுத்தூர் சப் டிவிசனில் இருந்து 19 பேர் மற்றும் சிவகாசி சப் டிவிசன் போலீசார் என 45க்கும் மேற்பட்டோர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிவகாசி பஸ் ஸ்டாண்ட், சாத்தூர் சாலை புள்ளைக்குழி, திருத்தங்கல் நகர் பகுதிகளில் கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தென்காசியை சேர்ந்த பாஸ்கர் கூறுகையில், `விலை குறைவாக இருப்பதால் சிவகாசிக்கு பட்டாசு வாங்க வந்துள்ளோம். எதிர்பார்த்த அளவு தரமான பட்டாசுகள் விலை குறைவாகவே கிடைக்கின்றந. தென்காசி, திருநெல்வேலியை விட சிவகாசியில் பட்டாசு விலை குறைவாகவே உள்ளது. சில பட்டாசு கடைகளுக்கு சென்று பட்டாசு விலை பார்த்தோம். சில கம்பெனி பட்டாசுகளில் 2 ஆயிரம், 3 ஆயிரம் என விலை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த பட்டாசுகள் 300 ரூபாய்க்கும் 500 ரூபாய்க்கும் தருகின்றனர். இதனால் உண்மையான விலை என்பது தெரியாமல் குழப்பம் ஏற்படுகிறது. பட்டாசு விலையை உற்பத்தி செய்யும் ஆலையை விட பட்டாசு விற்பனையாளர்தான் விலையை முடிவு செய்கின்றனர் என்று தெரிகிறது. இது போன்ற குழப்பத்திற்கு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் நிரந்தர தீர்வு காண வேண்டும்’ என்றார். …

The post தீபாவளி பண்டிகை நெருங்குவதால் சிவகாசியில் பட்டாசு வாங்க குவியும் வெளியூர் மக்கள்.! appeared first on Dinakaran.

Tags : diwali ,Sivakasi ,Dhiwali Festivali ,
× RELATED தின… தின… தின… தீபாவளி!