×

ஆடுகளம் சரியில்லை என அதிருப்தி: எசக்ஸ் - இந்தியா பயிற்சி ஆட்டம் 3 நாள் போட்டியாக குறைப்பு: செம்ஸ்போர்டில் இன்று தொடக்கம்

லண்டன்: இந்தியா - எசக்ஸ் அணிகளிடையே இன்று தொடங்கும் பயிற்சி ஆட்டம், ஆடுகளம் மோசமாக இருப்பதாக இந்திய வீரர்கள் அதிருப்தி தெரிவித்ததை அடுத்து 4 நாட்களுக்கு பதிலாக 3 நாள் போட்டியாக நடத்தப்படுகிறது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, முதலில் நடந்த டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்து நடந்த ஒருநாள் போட்டித் தொடரை இங்கிலாந்து 2-1 என கைப்பற்றி பதிலடி கொடுத்தது. இந்த நிலையில், இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்குகிறது.இந்த போட்டிக்கு தயாராகும் வகையில், எசக்ஸ் அணியுடன் இந்தியா மோதும் 4 நாள் பயிற்சி ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

செம்ஸ்போர்டு கவுன்டி மைதானத்தில் இன்று தொடங்கும் இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் நேற்று தீவிரமாகப் பயிற்சி செய்தனர். இரண்டு பிரிவுகளாக சுமார் 4 மணி நேரம் பயிற்சியில் ஈடுப்பட்டனர். வேகப் பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பூம்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி ஆகியோர் பந்துவீச்சை ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், கருண் நாயர், புஜாரா ஆகியோர் எதிர்கொண்டனர். கேப்டன் விராத் கோஹ்லி, பந்தை வேகமாக த்ரோ செய்ய வைத்து பேட்டிங் பயிற்சி எடுத்தார். இந்த பயிற்சியின்போது மைதானம் மற்றும் ஆடுகளம் சரியான பராமரிப்பின்றி மோசமாக இருந்ததால் இந்திய வீரர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இது போன்ற களத்தில் விளையாடினால், பீல்டிங் செய்யும்போது காயம் அடைவதற்கான வாய்ப்பு அதிகம் என இந்திய அணி சார்பில் ஸ்டேடிய நிர்வாகிகளிடம் புகார் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இந்திய அணி கோரிக்கைகளை எசக்ஸ் கவுன்டி கிளப் நிர்வாகம் ஏற்றுக் கொண்டதாகவும், ஆடுகளத்தில் அளவுக்கு அதிகமாக உள்ள புற்களை அகற்றவும், 4 நாள் ஆட்டத்துக்கு பதிலாக 3 நாள் ஆட்டமாக நடத்தவும் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது. மிகக் கடினமான தொடருக்கு தயாராகும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போட்டிக்கான மைதானம் மோசமாக இருப்பது இந்திய வீரர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. எசக்ஸ் அணியில் முன்னணி வீரர் அலஸ்டர் குக் களமிறங்காததும் இந்திய வீரர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
 ஏற்கனவே இங்கிலாந்து வேகம் ஆண்டர்சன், இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி பற்றி விமர்சித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், எசக்ஸ் ஆடுகள சர்ச்சையும் சேர்ந்துகொண்டுள்ளது.

இதனால் டெஸ்ட் தொடரில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30க்கு தொடங்கும் பயிற்சி ஆட்டத்தில், இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 18 வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், முரளி விஜய், செதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரகானே (துணை கேப்டன்), கருண் நாயர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பூம்ரா, ஷர்துல் தாகூர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : India, the Essex team, training game, England
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...