×

திருவில்லிபுத்தூர் அருகே நுண்கற்கால, புதிய கற்கால கருவிகள் கண்டுபிடிப்பு: அகழாய்வு செய்ய கோரிக்கை

விருதுநகர்:திருவில்லிபுத்தூர் அருகில் விழுப்பனூர் ஊராட்சியில் வேளாண் பொறியியல் விரிவாக்க மையத்தின் எதிரில் கொல்லம், மதுரை தேசிய நெடுஞ்சாலை கிழக்கு பகுதியை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவக்குமார், ராமநாதபுரம் சேதுபதி கலை கல்லூரி முதுகலை தமிழ்த்துறை மாணவி சிவரஞ்சனி, திருப்புல்லாணி தொன்மை பாதுகாப்பு மன்ற 10ம் வகுப்பு மாணவன் மனோஜ் மேற்பரப்பாய்வு செய்தனர். அதில் நுண்கற்காலத்தை சேர்ந்த ஒரு சுரண்டி, புதிய கற்காலத்தை சேர்ந்த சிறிய கற்கோடாரி, முதுமக்கள் தாழியின் உடைந்த ஓடுகள், இரும்பு தாதுக்கள், இரும்புகழிவுகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு கூறுகையில், கண்டெடுக்கப்பட்டுள்ள நுண்கற்கால கருவியின் நீளம் 4 செ.மீ, அகலம் 4.5 செ.மீ ஆக உள்ளது. இது செர்ட் வகை கல்லால் செய்யப்பட்ட சுரண்டி. நுண்கற்காலம் கி.மு 10,000 முதல் கி.மு 3,000 வரையிலானது. நுண்கற்கால கருவிகள் அளவில் மிகச்சிறியவை. பழைய கற்காலத்தில் கருவிகள் செய்யும் போது உடைந்த சிறிய துண்டுகளை நுண்கற்காலத்தில் அம்புமுனைகள், சிறு கத்திகள், சுரண்டிகளாக பயன்படுத்தி உள்ளனர். இங்கு கண்டெடுக்கப்பட்ட புதிய கற்காலத்தை சேர்ந்த சிறிய கற்கோடரியின் நீளம் 5 செ.மீ. அகலம் கீழ்பகுதியில் 5.5 செ.மீ. மேல்பகுதியில் 3 செ.மீ, தடிமன் 1.5 செ.மீ அளவில் உள்ளது. கருங்கல்லால் ஆன இதை நன்கு தேய்த்து வழுவழுப்பாக்கி மெருகேற்றி உள்ளனர். மரத்தால் ஆன தடியில் கட்டி இதை ஆயுதமாகவும், பிறவற்றுக்கும் பயன்படுத்துவார்கள். புதிய கற்காலம் கி.மு 3,000 முதல் கி.மு 1,000 வரையிலானது.மனிதன் நாடோடி வாழ்க்கையில் இருந்து நிலையான வாழ்க்கைக்கு மாறிய இக்காலத்தில் வழுவழுப்பான கற்கருவிகள், கையாலும், சக்கரத்தாலும் செய்யப்பட்ட மட்பாண்டங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி உள்ளான். இரும்பை உருக்கி பயன்படுத்த அறிந்திருந்தனர்.நுண்கற்காலம், புதிய கற்காலக் கருவிகளோடு, பெருங்கற்கால முதுமக்கள் தாழிகளும் உள்ளதால் நுண்கற்காலம் முதல் பெருங்கற்காலம் வரையிலான சுமார் 12,000 ஆண்டுகள் தொடர் வரலாற்று சிறப்புடன் விழுப்பனூர் விளங்கி உள்ளது. இங்கு அகழாய்வு செய்து வரலாற்றை வெளிக்கொணர வேண்டும் என்றார். …

The post திருவில்லிபுத்தூர் அருகே நுண்கற்கால, புதிய கற்கால கருவிகள் கண்டுபிடிப்பு: அகழாய்வு செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiruvilliputhur ,Virudhunagar ,Tiruvilliputhur ,Villuppanur Panchayat Agricultural Engineering Extension Centre ,Kollam ,Madurai National Highway East ,
× RELATED சாத்தூர் அருகே மின்கம்பத்தை...