×

திருவாரூர் மாவட்டத்தில் சுட்டெரித்து வரும் கோடை வெயில் 92.6 டிகிரி அடித்ததால் பொதுமக்கள் பாதிப்பு

திருவாரூர், ஏப். 16: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 92.6 டிகிரி வரை சுட்டெரித்து வரும் கோடை வெயில் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் வழக்கமாக அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை காலம் துவங்கி முடிவுறும் நிலையில் அதன் பின்னர் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பனி காலமாக இருப்பது வழக்கமாக இருந்து வருவதுடன் ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் கோடை வெயில் சுட்டெரிப்பது வழக்கம். ஆனால் நடப்பாண்டில் இந்த வெயில் என்பது கடந்த பிப்ரவரி மாதத்திலேயே துவங்கியுள்ள நிலையில் வழக்கத்திற்கு மாறாக, 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பாண்டில் கோடை வெயில் இருக்கும் என்பதால் அதற்கேற்ப பொது மக்கள் தங்களை பாதுகாத்துகொள்ளுமாறு வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த கோடை காலத்தில் வழக்கமாக அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலும் துவங்கி நடைபெறுவது வழக்கம் என்ற நிலையில் நடப்பாண்டில் இந்த கத்திரி வெயிலானது அடுத்த மாதம் (மே) 4ம் தேதி துவங்கி 29ம் தேதி வரையில் சுட்டெரிக்கவுள்ளது. மேலும் தற்போதே இந்த வெயில் என்பது மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சதம் (100 டிகிரி) அடித்து வரும் நிலையில் திருவாரூர் மாவட்டத்திலும் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேல் 90 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வருகிறது. நேற்றும் இதேபோன்று 92.5 டிகிரி அளவில் வெயில் சுட்டெரித்த நிலையில் இதன் காரணமாக பொது மக்கள் நன்பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

இருப்பினும் தற்போது இருந்து வரும் நவீன காலத்தில் குடும்ப சூழல் காரணமாகவும், பணி காரணமாகவும் வெளியில் செல்வதை தவிர்க்க முடியாது என்ற நிலையிலும், குடை பிடித்தவாறும், பெண்கள் தங்களது புடவை மற்றும் துப்பட்டாவினால் தலைமையில் மூடியவாறும், வயதான ஆண்கள் தங்களது துண்டால் தலையை மூடியவாறும் வெளியில் சென்று வருகின்றனர். மேலும் இந்த வெயில் காலத்தின் போது வழக்கத்தை விட கூடுதலான அளவில் மனிதர்கள் உடலில் வெப்பம் அதிகரிப்பதையொட்டி காய்ச்சல், அம்மை, மயக்கம் மற்றும் சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த கோடை வெயிலின் போது மனிதர்கள் தங்களை வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக இளநீர், தர்பூசணி பழங்கள், வெள்ளரிப்பிஞ்சுகள், நீர்மோர் உள்ளிட்டவற்றை அருந்துவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் நோய்களிலிருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்துகொள்ள அதிகளவில் நீர் அருந்துவதுடன், நீர் சத்து அதிகம் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை தினந்தோறும் சேர்த்துகொள்ள வேண்டும்.

மேலும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை தவிர்த்துகொள்ள வேண்டும் என்பதுடன் இந்த கோடை வெயிலிலிருந்து நோய் ஏற்படுவதை தவிர்த்துகொள்ள பொது மக்கள் தங்களது பணிகளுக்காக வெளியில் செல்வதை குறைத்துகொள்ள வேண்டும் அவ்வாறு பணி காரணமாக வாய்ப்பில்லாமல் போகும் பட்சத்தில் பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரையில் வெயிலின் உச்ச கால நேரத்திலாவது தவிர்த்துகொள்வது நல்லது என மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவதுறையினர் தெரிவித்துள்ளனர்.

The post திருவாரூர் மாவட்டத்தில் சுட்டெரித்து வரும் கோடை வெயில் 92.6 டிகிரி அடித்ததால் பொதுமக்கள் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvarur district ,Tiruvarur ,Tiruvarur district ,
× RELATED திருவாரூர் மாவட்டம்...