×

திருமணம் முடிந்ததும் பனை விதையை நட்ட தம்பதி : 75,000 பனை விதைகள் நட ஏற்பாடு

பள்ளிகொண்டா : பள்ளிகொண்டாவில் திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் மணமக்கள் ஏரியின் அருகே பனை விதையை நட்டது பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா யாதவ வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்- விஜயா தம்பதியினர். விவசாயியான ரவிச்சந்திரன் அணைக்கட்டு வட்டார உழவர் உற்பத்தியாளர் குழு இயக்குநர்களில் ஒருவராக உள்ளார். இவர் தனது விவசாய நிலத்தில் உள்ள பனை மரங்களில் விதைகளை சேகரித்து இந்த சுற்றுவட்டார பகுதி முழுவதும் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75,000 பனை விதைகளை நட ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில், இவரது மகனான அரவிந்த்ராஜுக்கும், காட்பாடியை சேர்ந்த ஜெயஸ்ரீக்கும் பள்ளிகொண்டாவில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது.  தொடர்ந்து பனை விதைகளை நடும் முயற்சியின் தொடக்கமாக தனது மகனின் திருமணம் மூலம் பனை விதைகளை நட்டு 75,000 பனை விதைகள் நடுவதற்கு உண்டான பணிகளை தொடங்கியுள்ளார். நேற்று காலை 6 மணிக்கு திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் பள்ளிகொண்டா ஏரிக்கரையில் புதுமண தம்பதி ஜோடிகள் பனை விதைகளை நட்டனர். இந்த செயல் அந்த பகுதி பொதுமக்களிடையேயும், விவசாயிகள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இதுபற்றி மணமகனின் தந்தையும், விவசாயியுமான ரவிச்சந்திரன் கூறியதாவது:  வளர்ந்து வரும் காலநிலை மாற்றத்தால் மக்கள் இயற்கையை மறந்து செயற்கையான வாழ்க்கை பாதையில் சென்று கொண்டுள்ளனர். தமிழர்களின் பாரம்பரிய மரமான பனை மரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75,000 பனை விதைகளை நட முடிவு செய்தேன். அதனை எனது மகனின் திருமணம் முடிந்த கையோடு ஆரம்பித்து உள்ளேன். தொடர்ந்து பள்ளிகொண்டா பெரிய ஏரியை சுற்றிலும் பனை விதைகள் நட்டு அவைகள் பாதுகாக்கப்படும். இதனால் எதிர்காலத்தில் பனை சார்ந்த தொழில்கள் தழைத்தோங்கும். மக்களும் இயற்கைக்கு திரும்ப வேண்டும் என இதன் மூலம் கேட்டுக்கொள்கின்றேன்.  இவ்வாறு அவர் கூறினார். விவசாயி எடுத்துள்ள இந்த முயற்சியை பொதுமக்களும், இயற்கை சமூக ஆர்வலர்களும் பாராட்டியுள்ளனர்….

The post திருமணம் முடிந்ததும் பனை விதையை நட்ட தம்பதி : 75,000 பனை விதைகள் நட ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Pallikonda ,
× RELATED பாஸ்டேக்கில் பணம் இல்லாததால் அரசு...