திருத்தணி கோயிலில் தெப்ப திருவிழா சரவண பொய்கை திருக்குளத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்

திருத்தணி : திருத்தணியில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 5 நாட்கள் ஆடி கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி கிருத்திகை நேற்றுமுன்தினம் வெகு விமரிசையாக நடந்தது. இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருத்தணியில் குவிந்து விடிய விடிய காத்திருந்து முருகப்பெருமானுக்கு காவடிகள் செலுத்தி சாமி தரிசனம் செய்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். இதனைத் தொடர்ந்து, மாலை 6 மணியளவில் கோயில் அடிவாரத்தில் உள்ள சரவண பொய்கை திருக்குளத்தில் முதல்நாள் தெப்பத் திருவிழா நடைபெற்றது. இதற்காக மலைக்கோயில் இருந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமான் மேள தாளங்கள் முழங்க படிகள் வழியாக திருக்குளம் வந்தடைந்தார்.

மேலும், வண்ண விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானுக்கு மகா தீபாராதணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து அமைச்சர் ஆர்.காந்தி, திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர் திருத்தணி பூபதி, கோயில் அறங்காவல் குழு தலைவர் சு.தரன், துணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) அருணாச்சலம், முதல் நாள் தெப்பத் திருவிழா உபயதாரர் கல்வியாளர் ரமேஷ் ராஜ் உட்பட முக்கிய பிரமுகர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இதில் தெப்பம் மூன்று முறை குளத்தை சுற்றி வலம் வந்தது. தெப்பத் திருவிழாவில் திரைப்பட பின்னணிப் பாடகர் வேல்முருகன் குழுவினரின் பக்தி இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது. தெப்ப திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அரோகரா முழக்கங்களுடன் மாவிளக்கு ஏற்றி தீபாராதனை காட்டி சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

இரண்டாம் நாளான நேற்று மாலை 6 மணியளவில் 2ம் நாள் தெப்பத்திருவிழா தொடங்கியது. இதில் முருகப்பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி 5 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

The post திருத்தணி கோயிலில் தெப்ப திருவிழா சரவண பொய்கை திருக்குளத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான் appeared first on Dinakaran.

Related Stories: