×

திருச்சி மாவட்டத்தில் சராசரியை விட குறைவாக மழை பெய்ய வாய்ப்பு விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை

திருச்சி.செப்.27: திருச்சி மாவட்டத்தில் சராசரியை விட குறைவாக வடகிழக்கு பருவ மழை பொழிய வாய்ப்புள்ளதால் விவசாயிகளுக்கு பயிர்பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்து வேளாண் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.
வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்குனரகம், கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், இந்த ஆண்டின் வடகிழக்கு பருவமழைக்கான முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் சராசரியாக ஆண்டின் மழை அளவு 742.1 மிமீ ஆகும். இதில் வடகிழக்கு பருவமழையின் பங்கு 378 மிமீ. அதைத்தொடர்ந்து தென்மேற்கு பருவ மழையின் பங்களிப்பு 277 மிமீ ஆக உள்ளது.
இந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை திருச்சி மாவட்டத்திற்கு 6.3 சதவீதம் ஆகும். சராசரியை விட குறைவாக பொழிய வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழையில் திருச்சி மாவட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட சராசரி மழை அளவானது 378 மிமீ. இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் மழை அளவானது 354 மிமீ என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே திருச்சி மாவட்டத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையம், சிறுகமணியில் உள்ள மாவட்ட வேளாண் வானிலை மையம் வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பயிர் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வழங்கி உள்ளனர். வடகிழக்கு பருவமழை காலத்தில் குறுகிய மற்றும் நடுத்தர கால ரகங்களை பயன்படுத்த வேண்டும். பாசன வசதியை உறுதி செய்யாமல் நீண்ட கால ரகங்களை பயிர் செய்ய தேர்வு செய்ய வேண்டாம். ஒவ்வொரு 6 மீ அல்லது 20 அடி இடைவெளியிலும் சிறிய குறுக்குவெட்டு திட்டுகள் அமைக்கப்பட வேண்டும்.

பயிர் பருவத்தில் அதிக மழை பெய்தால் பண்ணைக்குளத்தில் வடி கட்டலாம், அறுவடை செய்யப்பட்ட நீரை இடைக்கால அல்லது இறுதி வறட்சியின் போது துணை பாசனத்திற்கு பயன்படுத்தலாம். சரியான நேரத்திற்கு விதைத்தல் தென்மேற்கு பருவ மழையின் இறுதி காலத்தில் பொழியக்கூடிய மழையை பயன்படுத்தி வடகிழக்கு பருவமழை காலத்திற்கான விதைப்பு நடவடிக்கைகளை அக்டோபர் இரண்டாம் வாரத்திற்குள் மேற்கொள்ளலாம்.
அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் விதை கடினப்படுத்துதலுடன் முன்பருவகால விதைப்பு அறிவுறுத்தப்படுகிறது. கறுப்பு மண் பகுதிகளுக்கு பரந்த படுக்கை விதைப்பு முறை பரிந்துரைக்கப்படுகிறது. முகடுகளிலும், சால்களிலும், முகடுகளில் அடிப்பகுதியில் இருந்து 1/3 வது உயரத்தில் விதைக்க வேண்டும்.

பயிரின் இடைக்கால அல்லது இறுதிகால வறட்சியை தடுக்க பிபிஎப்எம் ஸ்பிரேயர்களை தயார் செய்யவும். மண்ணின் ஈரப்பதம் இழப்பைத் தடுக்க பயிர் எச்சங்களை தழைக்கூளமாகப் பயன்படுத்தலாம். நெல்லில் காய்ச்சலும் பாய்ச்சலும் முறையை பயன்படுத்தி பாசனம் செய்ய வேண்டும் பயிர்களின் வறட்சியை தாங்கும் தன்மையை அதிகரிக்க, இலை வழியில் KCl 1% (அல்லது) 1% யூரியா + 2% MAP + 1% KCl ஐ உச்ச தாவர நிலையில் தெளிக்க பரிந்துரைக்கப்படுகிறது. பயிர் காலத்தில் ஏற்படும் வறட்சியின் தாக்கத்தை தடுக்க தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர் வளர்ச்சி ஊக்கிகளை பயன்படுத்தலாம். இவ்வாறு விவசாயிளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post திருச்சி மாவட்டத்தில் சராசரியை விட குறைவாக மழை பெய்ய வாய்ப்பு விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Trichy district ,Trichy.Sep ,Dinakaran ,
× RELATED சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில்...