×

திண்டிவனம் அருகே துணிகரம் கவுன்சிலர் வீட்டின் பூட்டை உடைத்து ₹17 லட்சம் நகை, பணம் கொள்ளை

திண்டிவனம், மே 5: கவுன்சிலர் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் தங்க நகைகள், ரூ.5.75 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மகாத்மா காந்தி நகர் பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் வழக்கறிஞர் ராம்குமார்(39). திண்டிவனம் 24வது வார்டு கவுன்சிலரான இவர், திண்டிவனம் அடுத்த தென்பசார் கிராமத்தில் நாகாத்தம்மன் கோயில் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் நிர்வாகியாக இருந்து வருகிறார். திண்டிவனத்தில் குடும்பத்தினருடன் வசித்து வரும் இவர், அவ்வப்போது கோயில் அருகே உள்ள வீட்டிலும் தங்கி இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சென்னையில் நடைபெற்ற உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.

நேற்று மதியம் ராம்குமாரின் மனைவி கெஜலட்சுமி, கோயில் அருகில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் முன்பக்க கேட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, உள்ளே மரக்கதவில் இருந்த தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது மூன்று அறைகளில் வைக்கப்பட்டிருந்த பீரோவை உடைத்து, அதிலிருந்த 26 பவுன் தங்க நகைகள், ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் ரொக்க பணம், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், எல்இடி டிவி, பத்திரங்கள் உள்ளிட்டவை கொள்ளை போனது தெரிய வந்தது. மொத்த மதிப்பு ரூ.17 லட்சம் இருக்கும். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் காவல் நிலைய போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. அது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வரை ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து மயிலம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து வீட்டை உடைத்து நகைகள் மற்றும் பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post திண்டிவனம் அருகே துணிகரம் கவுன்சிலர் வீட்டின் பூட்டை உடைத்து ₹17 லட்சம் நகை, பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Vadhakaram ,Tindivanam ,Dindivanam ,
× RELATED திண்டிவனம் அருகே சாலை நடுவில் வேன் கவிழ்ந்து 14 பேர் காயம்..!!