×

தாவரவியல் பூங்கா நடைபாதையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்-போலீசார், நகராட்சி அதிகாரிகளிடம் சிறு வியாபாரிகள் வாக்குவாதம்

ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி நிர்வாகம் அகற்றியது.   ஊட்டி வர கூடிய சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்காவை பார்க்காமல் செல்வதில்லை. இப்பூங்காவின் வெளிப்பகுதியில் கார்டன் சாலை நடைபாதை, மதுவான சாலை ஓரங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் சாலையோர கடை வைத்துள்ளனர். இவர்கள் ஊட்டியில் விளைய கூடிய கேரட் ேபான்ற காய்கறிகள், வேர்கடலை, பூக்கள், விதைகள், சோளம் போன்றவற்றை சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்கின்றனர். பொம்மை, தொப்பி, குல்லா போன்றவற்றையும் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்க கூடிய வருவாயில் பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஆண்டு முழுவதும் கடை வைத்திருந்தாலும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான கோடை சீசன் சமயத்தில் மட்டுமே இவர்களுக்கு அதிக வருவாய் கிடைக்கும். நிரந்த கடைகள் இல்லாத நிலையில், நடைபாதை மற்றும் சாலைேயாரங்களில் கடை வைத்துள்ளனர். இதற்கு நகராட்சி எவ்வித அனுமதியும் தரவில்லை என கூறப்படுகிறது. இவர்களுக்கு மத்திய அரசின் சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை வைத்துள்ளதாக தெரிகிறது.இந்நிலையில் இப்பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட நடைபாதை மற்றும் சாலையோர கடைகளை வியாபாரிகள் தாங்களாகவே அப்புறப்படுத்தி கொள்ளுமாறு நகராட்சி நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் சிறு வியாபாரிகள் அப்புறப்படுத்தாத நிலையில் நகராட்சி ஆணையர் காந்திராஜன் தலைமையில் நேற்று காலை ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்ட கடைகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர். தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் கடைகளை அகற்றும் பணிகளை துவக்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக டவுன் டிஎஸ்பி., மகேஸ்வரன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். சில வியாபாரிகள் தாங்களாகவே கடைகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர். தொடர்ந்து மினி பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் மற்றும் கழிவுகளை நகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். இதனால் தாவரவியல் பூங்கா பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஊட்டி தாவரவியல் பூங்கா முக்கிய பகுதியாக விளங்கி வருகிறது. இங்கு முக்கிய பிரமுகர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர். இப்பகுதியில் உள்ள சாலையோர கடைகள் நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. சாலையோர வியாபாரிகள் நிரந்தரமாக கடை வைக்க அனுமதி கிடையாது. நாள்தோறும் விற்பனை பொருட்களை கொண்டு வந்து வைத்து விற்பனை செய்து விட்டு எடுத்து சென்று விட வேண்டும். ஆனால் இங்கு நிரந்தரமாக கடை வைத்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் சமயங்களில் போக்குவரத்து பாதிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு 120 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டுள்ளன, என்றனர். இதுகுறித்து சிறு வியாபாரிகள் கூறுகையில், சுற்றுலா பயணிகளை நம்பி தாவரவியல் பூங்காவை ஒட்டியுள்ள நடைபாதையில் சிறு கடைகள் வைத்து பிழைப்பு நடத்தி வந்தோம். அதனை நகராட்சி நிர்வாகம் அகற்றிய நிலையில் பிழைப்பிற்கே வழியின்றி உள்ளோம். மீண்டும் கடை அமைக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்கும் வகையில் மீண்டும் கடைகள் அமைக்க அனுமதிக்க வேண்டும், என்றனர்….

The post தாவரவியல் பூங்கா நடைபாதையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்-போலீசார், நகராட்சி அதிகாரிகளிடம் சிறு வியாபாரிகள் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Botanical Garden ,Ooty ,Ooty Botanical Garden Road ,
× RELATED தோடர் பழங்குடியின மக்கள் விற்பனை நிலைய கட்டுமான பணி தீவிரம்