×
Saravana Stores

தாமிரபரணி ஆற்றைத் தொடர்ந்து கிணறுகள், போர்வெல் உப்பாக மாறும் அபாயம்

நித்திரவிளை: குமரி மேற்கு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது தாமிரபரணி ஆறு. கடந்த 2005ம் ஆண்டு தேங்காபட்டிணம் மீன்பிடி துறைமுக பணிகள் ஆரம்பித்த பிறகு ஆறும் கடலும் எப்போதும் ஒன்று சேர்ந்த நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில் விசைப்படகுகள் சென்று வர ஆறும் கடலும் சேருமிடம் ஆழப்படுத்தப்பட்டது.அப்போது கடலில் அலை அடிக்கும் நேரத்தில் கடல் நீர் ஆற்றில் கலந்து மேல் நோக்கி வரத் தொடங்கியது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, மாதங்களில் மழை இல்லாத வேளையில் ஆற்றில் தண்ணீர் மேல் வரத்து இருக்காது. அந்த நேரம் கடல் நீர் ஆற்றில் புகுந்து 2014ம் ஆண்டு குழித்துறை சப்பாத்து பாலம் வரை சுமார் 11 கிலோமீட்டர் ஆறு உப்பாக மாறியது.இதனால் 79 கடலோர கிராம குடிநீர் திட்டம், களியக்காவிளை – மெதுகும்மல் கூட்டு குடிநீர் திட்டம், ஏழுதேசம் – கொல்லங்கோடு கூட்டு குடிநீர் திட்டம், புதுக்கடை கூட்டு குடிநீர் திட்டம், 19 வழியோர குடிநீர் திட்டம், 17 பேரூராட்சிகளின் குடிநீர் திட்டம், வாவறை, மங்காடு, விளாத்துறை, பைங்குளம், முஞ்சிறை ஆகிய ஊராட்சிகளின் குடிநீர் திட்டம் ஆகியவற்றின் உறை கிணறுகள் உப்பாக மாறியது.இதனால் குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் உப்புநீரை குடிநீராக வினியோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுபோல் ஆற்றின் இரு பக்கமும் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் நிலத்தடிநீர் உப்பாக மாறியது. பொதுமக்கள் குடிநீருக்கு பெரும் அவதிப்பட்டனர். ஆகவே கடல்நீர் ஆற்றில் புகாதவாறு தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் தனித்தனியாக போராட்டம் நடத்தினர். 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி துவங்கப்பட்டது. பணி துவங்கி 16 மாதங்கள் கடந்த நிலையில் 20 சதவீத பணிகள் கூட முடிவடையாமல் இருந்தது. சமூக ஆர்வலர்கள் தடுப்பணை மீட்பு குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி சத்தியாகிரக போராட்டம் நடத்தினர்.அப்போது அதிகாரிகள் வரும் பத்து மாதங்களுக்குள் தடுப்பணையை பணியை முடித்து விடலாம் என்று உறுதியளித்தனர். ஆறு மாதங்கள் கடந்த நிலையில் இதுவரை 50 சதவீதம் பணிகள் கூட நிறைவடையாமல் தான் காணப்படுகிறது. தற்போது ஆற்றில் தண்ணீர் மேல் வரத்து குறைவாக இருப்பதால் மங்காடு சப்பாத்து பாலம் வரை ஐந்து கிலோமீட்டர் தூரம் ஆறு உப்பாக மாறியுள்ளது இதனால் வாவறை, மங்காடு, முஞ்சிறை, பைங்குளம், ஏழு தேசம் பேரூராட்சி, புதுக்கடை பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு குடிநீர் தேவைக்கு உப்புநீர் வினியோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.நிலத்தடிநீர் உப்பாக மாறி தனியார் கிணறுகள், போர்வெல் உப்பாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே ஆற்றில் உப்புதன்மையை குறைக்க பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்….

The post தாமிரபரணி ஆற்றைத் தொடர்ந்து கிணறுகள், போர்வெல் உப்பாக மாறும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Tamiraparani river ,Nithravilai ,Thamiraparani River ,Kumari West District ,Tengapattinam ,Dinakaran ,
× RELATED முக்காணி தாமிரபரணி ஆற்றங்கரையில் 900...