ஊத்துக்கோட்டை, செப். 26: தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் சாலை விரிவாக்க பணிக்காக கோயில்களை அகற்ற சென்ற நெடுஞ்சாலை துறையினரிடம் கிராம மக்கள், வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து கடைகளை அடைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரியபாளையம் அருகே, தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு 75 வருடங்களாக நவசக்தி விநாயகர் மற்றும் நாகாத்தம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலைச்சுற்றி 100க்கும் மேற்பட்ட பெட்டிக்கடை, ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக திருநின்றவூர் முதல் பெரியபாளையம் வரை சாலை விரிவாக்கப்பணிகள் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நெடுஞ்சாலை துறையினர் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் உள்ள நவசக்தி விநாயகர், நாகாத்தம்மன் கோயிலை அகற்றுவதற்காக நோட்டீஸ் கொடுத்தனர். கோயிலை அகற்றக் கூடாது என அப்பகுதி மக்களும், வியாபாரிகளும் கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலை துறையினரிடம் மனு கொடுத்தனர். இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் நெடுஞ்சாலை துறையினர் கோயிலை அகற்றுவதற்காக வருகிறார்கள் என தகவல் பரவியது.
இதனையறிந்த அப்பகுதி மக்களும், வியாபாரிகளும் கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தங்களின் கடைகளை அடைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நெடுஞ்சாலை துறையினர் மீண்டும் கோயில் சுவற்றில் இறுதி நோட்டீஸ் ஒட்டி விட்டு சென்றனர். இதனால், அக்கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் உள்ள விநாயகர் மற்றும் அம்மன் கோயில் கட்டி சுமார் 75 வருடங்களுக்கு மேல் ஆகிறது. மேலும், நெடுஞ்சாலை துறையினர் திருநின்றவூர் முதல் பெரியபாளையம் வரை தான் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். ஆனால் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் உள்ள விநாயகர் கோயில் திருவள்ளூர் சாலையில் அமைந்துள்ளது. அதை ஏன் அகற்ற வேண்டும். எனவே அந்த கோயில்களை அகற்றினால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என கூறினர்.
The post தாமரைப்பாக்கம் சாலை விரிவாக்க பணி கோயில்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்: இறுதி நோட்டீஸ் ஒட்டிய நெடுஞ்சாலைத்துறையினர் appeared first on Dinakaran.