×

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை காட்டிக்கொடுத்த டிராவல்ஸ் உரிமையாளர் சிறையில் அடைப்பு காரில் போலீசே கஞ்சா வைத்து சிக்க வைத்த கொடுமை







சென்னை: லஞ்சம் கேட்டதாக மொட்டை கடிதம் அனுப்பியவரின்  காரில் குற்றாவளி மூலம் கஞ்சாவை ரகசியமாக வைத்த காவல்துறையால்  டிரைவிங் ஸ்கூல் உரிமையாளரை கைது செய்து சிறையில் தள்ளிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  சென்னை அபிராமபுரத்தை சேர்ந்தவர் ஜெயவீரபாண்டி மாதவ் (43). இவர் அபிராமபுரம்  ராணி அண்ணாதுரை தெருவில் மார்டன் ஓட்டுனர் பயிற்சி பள்ளி  நடத்தி வருகிறார். இவர், கடந்த மாதம் 17ம் தேதி மந்தைவெளி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் பயிற்சி பள்ளியின் காருக்கு எப்சி  முடிந்து எடுத்து சென்றுள்ளார்.இந்நிலையில் அபிராமபுரம் காவல் நிலையத்திற்கு TN.06 A 2022 என்ற காரில் கஞ்சா கடத்தப்படுவதாக மர்ம நபர் ஒருவர் ரகசிய தகவல்  கொடுத்தார். அதன்படி உதவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் காவலர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் திடீர் வாகன ேசாதனையில் ஈடுபட்டனர்.  அப்போது, ஜெயவீரபாண்டி மாதவ் ஓட்டிவந்த காரை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையில் காரில் 1.20 கிலோ கஞ்சா இருந்தது  தெரியவந்தது. உடனே போலீசார் காரை ஓட்டிவந்த ஜெயவீரபாண்டி மாதவை கைது செய்து அவரிடம் இருந்து கார் மற்றும் கஞ்சாவை பறிமுதல்  செய்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் கஞ்சா எங்கிருந்து வாங்கப்பட்டது என்பது குறித்து கைது செய்யப்பட்ட  ஜெயவீரபாண்டி மாதவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ஜெயவீரபாண்டி மாதவ் காரில் இருந்த கஞ்சாவுக்கும் எனக்கு எந்த தொடர்பும்  இல்லை.

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்துதான் எனது வாகனத்தை எப்சி முடிந்து எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.  அதற்குள்  உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் டிரைவிங் ஸ்கூல் உரிமையாளரை கைது செய்து சிறையில் அடைத்தனர். எனினும், தான் கஞ்சா  கடத்தவில்லை என்று உயரதிகாரிகளுக்கு அவரும், அவரது உறவினர்களும் புகார் அளித்தனர்.இதையடுத்து உண்மை தன்மையை அறியும் வகையில் போலீஸ் உயரதிகாரிகளின் ரகசிய உத்தரவுப்படி தனிப்படையினர் கஞ்சா குறித்து ரகசிய  விசாரணையை துவக்கினர். ஆரம்பம் முதலே சினிமாவை மிஞ்சும் சம்பவங்கள் இந்த வழக்கில் இருப்பதை போலீசார் புரிந்து கொண்டனர்.உடனடியாக போலீசார் மந்தைவெளி ஆர்டிஓ அலுவலகம் அருகே இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு செய்தனர். அப்போது அலுவலகம்  அருகே நிறுத்தப்பட்டிருந்த ஜெயவீரபாண்டி மாதவ் காரை, பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் திறந்து பையை வீசிவிட்டு ெசன்ற காட்சிகள் தெளிவாக  பதிவாகி இருந்தது. சிசிடிவியில் அடையாளம் காணப்பட்ட நபர் கண்ணகி நகரை சேர்ந்த சத்யா (30) என்று தெரியவந்தது. சத்யா பல்வேறு குற்ற  வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. அதன்படி சத்யாவை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியானது. பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் உள்ள குற்றப்பிரிவு தலைமை காவலர்  முத்துகிருஷ்ணன், சத்யாவிடம் கண்ணகி நகரில் இருந்து ஒரு கிலோவுக்கும் மேல் கஞ்சா வாங்கி வரச்சொன்னார். பின்னர் நான் சொல்லும் இடத்தில்  ஒரு கார் நிற்கும். அந்த காரின் எண், கலர் ஆகியவற்றை சொன்னார். அதில் இந்த கஞ்சா பையை வைத்துவிட்டு ஓடிவிடு என்று கூறினார். அதன்படி  நான் கஞ்சா பையை மந்தைவெளி வாட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே நின்ற TN.06 A 2022 என்ற காரில் போட்டுவிட்டு சென்றேன்.  மற்றபடி எனக்கும் கஞ்சாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறினார்.முன்னதாக எப்சிக்கு வரும் கார் என்ன நிறம்? அந்த காரை எங்கு பார்க்கிங் செய்ய வேண்டும். காரின் பதிவு எண் ஆகியவற்றை போலீஸ்காரர்  முத்துகிருஷ்ணனிடம் ஆர்டிஓ ஆபீசில் வேலை செய்யும் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் அருண்ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும் கஞ்சா  பொட்டலம் போடும்போது டிரைவிங் ஸ்கூல் உரிமையாளரை நான் என் பக்கத்தில் இருக்கும்படி பார்த்து கொள்கிறேன் என்று ஆலோசனையும் வழங்கி  உள்ளார். இதனால்தான் கஞ்சா போடும்போது காரில் யாரும் இல்லை என்ற தகவல் வெளியானது.

போலீசார் விசார ணையில் வெளியான தகவல்: ஜெயவீரபாண்டி மாதவ் வட்டார போக்குவரத்து அலுவலக உயர் அதிகாரிகளுக்கு அதிகளவில் லஞ்சம் கேட்பதாக மோட்டார் வாகன ஆய்வாளர்  அருண்ஜெயக்குமார் மீது மொட்டை கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அருண் ஜெயக்குமார் இதற்கு பழிவாங்க வேண்டும்  என்று, என்னிடம் கூறினார். அதன்படி இருவரும் சேர்ந்து திட்டமிட்டு ஜெயவீரபாண்டி மாதவ் காரில் கஞ்சா பையை வைத்து அவரை போலீசாரிடம்  சிக்க வைத்தோம் என்று தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, உதவி கமிஷனர் சுதர்சன் உத்தரவுப்படி அபிராமபுரம் போலீசார், காரில் கஞ்சா வைத்த சத்யா, தலைமை காவலர் முத்துக்கிருஷ்ணன்,  மோட்டார் வாகன ஆய்வாளர் அருண்ஜெயக்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன்படி அபிராமபுரம் போலீசார் அனைவர் மீது  வழக்கு பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தலைமை காவலர் முத்துக்கிருஷ்ணன் ஈடுபட்டுள்ளதால் அவர் அளித்த  தகவல்கள் அனைத்தையும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உதவி கமிஷனர் சுதர்சன் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் தனிப்படையினர் பழைய குற்றவாளி கஞ்சா வைத்த கண்ணகி நகரை சேர்ந்த சத்யாவை மட்டும் கைது செய்துள்ளனர். ஆனால் முக்கிய  குற்றவாளியான தலைமை காவலர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அருண் ஜெயக்குமாரை இதுவரை போலீசார் கைது  செய்யவில்லை. இதற்கிடையே 1 கிலோ கஞ்சா தலைமை காவலர் முத்துக்கிருஷ்ணனுக்கு எப்படி கிடைத்தது. அவருக்கும் கஞ்சா வியாபாரிகளுக்கும்  என்ன தொடர்பு என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா வழக்கில் சிக்கியதால் மோட்டார் வாகன ஆய்வாளர் அருண்ஜெயக்குமார் இரண்டு வாரம் விடுப்பில் சென்று விட்டார். இந்த வழக்கில் முக்கிய  குற்றவாளியான முத்துக்கிருஷ்ணன் மற்றும் அருண் ஜெய்குமாரை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் நடப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகி  உள்ளது. லஞ்சம் வாங்குவது குறித்து மொட்டை கடிதம் அனுப்பிய ஒருவரை பழிவாங்க, சினிமா காட்சியை மிஞ்சியும் வகையில் நடந்த இந்த சம்பவம்  சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்தில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டதால் டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் ஜெயவீரபாண்டி மாதவ் தற்போது சிறையில் உள்ளார்.  அவரை விடுவிக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சினிமா காட்சிகளை மிஞ்சும் கிளைமாக்ஸ்  காட்சிகள் முடிவுக்கு வர சிசிடிவி காட்சிகளே பிரதானமாக இருந்தன.

போலீஸ்- குற்றவாளி கூட்டணி
கஞ்சா வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டதால் கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சன் நேரடியாக விசாரணை நடத்தினார். பழைய குற்றவாளி சத்யாவிடம் கஞ்சா பை ெகாடுத்த பட்டினப்பாக்கம் காவல் நிலைய தலைமை காவலர் முத்து கிருஷ்ணனை போலீஸ்  விசாரணையில் சிக்கினார். அவர் அளித்த வாக்குமூலம்: ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தும் ஜெயவீரபாண்டி மாதவ், தனது பயிற்சி பள்ளியில் ஓட்டுனர் பயிற்சி முடிக்கும் நபர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வாங்கி  கொடுப்பதால் மந்தைவெளி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேரடி தொடர்பில் உள்ளார். இதனால் மோட்டார் வாகன ஆய்வாளர் அருண்  ஜெயக்குமார் என்பவருக்கும் அவருக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்தது. பின்னர் தடையின்றி உரிமம் வழங்க வேண்டும் என்றால் பணம் தர  வேண்டும் என்று ஜெயவீரபாண்டி மாதவிடம் அருண்ஜெயக்குமார் கேட்டுள்ளார். முதலில் வேறு வழியின்றி மோட்டார் வாகன ஆய்வாளர்  அருண்ஜெயக்குமார் கேட்ட பணத்தை அவர் கொடுத்து வந்துள்ளார்.

Tags :
× RELATED தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற...