×

தமிழகம் ஆந்திராவை இணைக்கும் காட்பாடியில் 24 மணி நேரம் பயன்பாட்டில் உள்ள ரயில்வே மேம்பாலம் புதிதாக அமைப்பது எப்போது?

* பழைய பாலம் சீரமைத்தாலும் தாக்கு பிடிக்காது * பெரும் விபத்து ஏற்படும் என்று மக்கள் அச்சம்வேலூர்:  காட்பாடி ரயில்வே மேம்பாலம் தமிழகம் ஆந்திராவை இணைக்கும் மிக முக்கியமான பாலமாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் இருந்து வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக ஆந்திராவிற்கு செல்வதற்கும், ஆந்திராவில் இருந்து வேலூர் மாவட்டத்திற்கு வருவதற்கு இந்த பாலம் மட்டுமே போக்குவரத்து வசதிக்காக உள்ளது. இரு மாநிலங்களை மட்டும் இணைக்கும் பாலமாக இல்லாமல், காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேலூர் நோக்கி கல்வி, தொழில், வியாபாரம் என்று பல்வேறு காரணங்களுக்காக செல்லும் மக்களும் இந்த பாலத்தினை பயன்படுத்தி வருகின்றனர். இப்படி பொது போக்குவரத்து, சரக்கு ேபாக்குவரத்து என்று அனைத்து போக்குவரத்திற்கும் 24 மணி நேரம் பயன்பாட்டில் உள்ள ரயில்வே மேம்பாலமானது மிகவும் வலுவிழந்து காணப்படுகிறது. மேம்பாலத்தின் மீது பஸ் சென்றாலே தட, தடவென அதிரும் நிலையில் உள்ளது. ரயில்கள் பாலத்தின் அடியில் சென்றால், பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள சிமென்ட் பூச்சுகள் உதிரும் சம்பவங்கள் நடப்பது உண்டு. பாலத்தின் மேற்பகுதியிலும் இரவு நேரங்களில் இருள்சூழ்ந்தும் காணப்படுகிறது. இப்படி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தனா நிலையில் இருந்த பாலம் கடந்த ஆண்டு ₹2 கோடியில் சீரமைக்கும் பணிகள் தொடங்கியது. இதற்கிடையில் கொரோனாவால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து முன்னாள் முதல்வர் பழனிசாமி வருகைக்காக வலுவிழந்த பாலத்தின் மீது தார்சாலை போடப்பட்டது. இந்நிலையில் வலுவிழந்து காணப்படும் ரயில்வே மேம்பாலத்தினை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. 24 மணி நேரம் போக்குவரத்து பயன்பாட்டில் உள்ள பாலத்தினை சீரமைத்தாலும் வெகுகாலம் தாக்கு பிடிக்காது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வையுடன் காட்பாடி ரயில்வே மேம்பாலத்தின் அருகே மற்றொரு புதிய பாலம் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், தற்போது புனரமைக்கும் பழைய பாலம் நீண்ட நாள் தாக்கு பிடிக்காது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து ஆபத்தான நிலை ஏற்படும். எனவே உயிர்பலி ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கையாக ரயில்வே நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து, மற்றொரு புதிய பாலம் அமைக்க சீரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூகஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. …

The post தமிழகம் ஆந்திராவை இணைக்கும் காட்பாடியில் 24 மணி நேரம் பயன்பாட்டில் உள்ள ரயில்வே மேம்பாலம் புதிதாக அமைப்பது எப்போது? appeared first on Dinakaran.

Tags : Katpadi ,Tamil Nadu ,Andhra Pradesh ,Katpadi Railway ,
× RELATED வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை,...