×

தமிழகத்துக்கு தினசரி 20 ஆயிரம் குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்தை ஒதுக்கீடு செய்யுங்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: தமிழகத்துக்கு தினசரி 20 ஆயிரம் குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் தற்போது 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் கொரோனா தொற்றிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நுரையீரல் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்தை தேவையான அளவிற்கு கொள்முதல் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளிலும், ஆறு பெருநகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளிகளுக்கும் இந்த மருந்து வழங்கப்பட்டு வருகின்றது. அனைத்து மாநிலங்களுக்கும் இந்த மருந்திற்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்படி, தமிழ்நாட்டிற்கு இதுவரை 2 லட்சத்து 5 ஆயிரம் குப்பிகள், அதாவது நாளொன்றுக்கு 7 ஆயிரம் குப்பிகள் என்ற குறைந்த அளவிலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தேவைக்கு இது போதுமானதாக இல்லை என்பதால், இந்த ஒதுக்கீட்டை உடனடியாக உயர்த்தி தர வேண்டுமென மத்திய ரயில்வே மற்றும் வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் தொலைபேசி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். நாளொன்றுக்கு தமிழகத்துக்கு குறைந்தபட்சம் 20 ஆயிரம் குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்தை ஒதுக்கீடு செய்யுமாறும், அவ்வாறு செய்தால் மட்டுமே தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் தேவைகளை முழுமையாக நிறைவு செய்ய முடியுமென்றும் முதலமைச்சர் வலியுறுத்தினார். மத்திய அமைச்சரும், இந்த கோரிக்கை குறித்து பரிசீலித்து ஆவன செய்வதாக உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post தமிழகத்துக்கு தினசரி 20 ஆயிரம் குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்தை ஒதுக்கீடு செய்யுங்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M. K. Stalin ,Union Minister ,CHENNAI ,
× RELATED புதிதாக அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள...