×

தமிழகத்துக்கு என்எல்சி தேவை இல்லை அன்புமணி ராமதாஸ் பேச்சு

நெய்வேலி, ஜூலை 29: நெய்வேலியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் என்எல்சி தேவையில்லை என அன்புமணி ராமதாஸ் பேசினார். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் வளையமாதேவி உள்ளிட்ட பகுதியில் விளைநிலங்களை பாழ்படுத்தி வாய்க்கால் அமைக்கும் பணியை கடந்த 2 நாட்களாக செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் நேற்று நெய்வேலி என்எல்சி ஆர்ச் கேட் எதிரில் உள்ள நுழைவுவாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாமக மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசுகையில், என்எல்சி நிறுவனம் நிலம் எடுப்பதை நிறுத்திக்கொள்ள பல போராட்டங்களை பாமக நடத்தி உள்ளது. மண்ணை காப்பாற்ற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். என்எல்சி பிரச்னை என்பது தமிழக பிரச்னை. டெல்லி சென்று போராட்டம் நடத்திய உழவர் சங்கத்தினர் இங்கு வந்து போராட்டம் நடத்தாதது வருத்தமாக உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கூடுதல் இழப்பீடு கேட்டு பாமக போராடியது. அப்போது மின்சாரம் தேவைப்பட்டது. தற்போது தமிழகம் மின்மிகை மாவட்டமாக உள்ளது. அதனால் என்எல்சி தேவை இல்லை.

வளையமாதேவி பகுதியில் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு ஒரு இயந்திரம் கூட செல்லக்கூடாது. அப்படி சென்றால் தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெறும். கடலூர் மாவட்டத்தில் மட்டும் சாலை மறியல் நடைபெறாது. அருகில் உள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சாலை மறியல் நடைபெறும். என்எல்சி நிறுவனம் நிலம் கொடுத்தவருக்கு வேலை கொடுக்கவில்லை. மாவட்டம் முன்னேற்றத்துக்கும் எதுவும் செய்யவில்லை. என்எல்சி நிறுவனம் வழங்கும் 800 மெகாவாட் மின்சாரம் இல்லையென்றால் தமிழகம் இருளில் மூழ்கிவிடாது. மின்சாரம் உற்பத்தி செய்ய மாற்று வழிகள் ஏராளமாக உள்ளன.

ஆனால் சோறுக்கு மண் ஒன்றுதான் உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஒன்று கூடிய இளைஞர்கள் இதற்கு ஏன் போராடவில்லை. தூத்துக்குடியில் போராட்டம் நடத்தி ஸ்டெர்லைட் ஆலையை மூடினோம். ஸ்டெர்லைட் ஆலையைவிட பல மடங்கு நாசகரமானது என்எல்சி இந்தியா நிறுவனம். என்எல்சி நிறுவனம் பழுப்பு நிலக்கரியை வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி எடுக்க கையகப்படுத்தப்பட்ட நிலம் மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதைத்தான் நாங்கள் என்எல்சி நிறுவனத்திலும் எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு அவர் பேசினார்.

The post தமிழகத்துக்கு என்எல்சி தேவை இல்லை அன்புமணி ராமதாஸ் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,NLC ,Anbumani Ramadoss ,Neyveli ,Tamil Nadu ,Cuddalore ,
× RELATED நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின்...