×

தமிழகத்தில் சிசு உயிரிழப்புகளை பூஜ்ய நிலைக்கு கொண்டு வர வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுதுறை சார்பில் வாழ்நாள் ஊட்டச்சத்து பூங்காவை திறந்து வைத்து, தமிழகத்தில் சிசு உயிரிழப்புகளை பூஜ்ய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், தனியார் பங்களிப்பில் ரூ.45 லட்சம் மதிப்பில் பிறந்த குழந்தைகளின் 1000 வாழ்நாட்கள் குறித்து, ஊட்டச்சத்து பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கர்ப்பிணிகள் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஊட்டச்சத்து பூங்காவை நேற்று காலை சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். மேலும், ரூ.1 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படும் பயணிகள் தங்கும் விடுதிக்கு அடிக்கல் நாட்டினர்.பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிலேயே முதன்முறையாக தாயின் கருவறை போன்று இங்கு பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைகள் 1000 நாட்களில் எப்படி இருக்கும் என்பதை, பொதுமக்களுக்கு சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவர் சௌமியா சாமிநாதன் அறிவுறுத்தலின்படி இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் வளர்க்கப்பட உள்ளன.தமிழகத்தில், மாதத்துக்கு 75 முதல் 83 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன. இதில் 60 சதவீத பெண்கள் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்று கொள்கின்றனர். மேலும், தமிழகத்தில் 75 சதவீதம் வரை மகப்பேறு சேவையை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வில் குறைவான சிசு உயிரிழப்பில் தமிழகம் 2வது இடத்தில் இருப்பதாகவும், ஆயிரத்தில் 13 குழந்தைகள் மட்டுமே உயிரிழப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சிசு உயிரிழப்பை பூஜ்ய நிலைக்கு கொண்டுவர டாக்டர்களிடம் அறிவுறுத்தி வருகிறேன். அதற்கான அறிவுறுத்தலும் வழங்கப்படுகிறது என்றார். நிகழ்ச்சியில் எம்பி செல்வம், தமிழக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு நகராட்சி தலைவர் தேன்மொழி நரேந்திரன், அரசு மருத்துவமனை டீன் முத்துகுமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post தமிழகத்தில் சிசு உயிரிழப்புகளை பூஜ்ய நிலைக்கு கொண்டு வர வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,M. Subramanian ,Chengalpattu ,People's Welfare Department ,Chengalpattu Government Hospital ,
× RELATED தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு...