×

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை நாளை மறுநாள் திறக்க ஏற்பாடு: மாணவர் சேர்க்கையும் நடக்கிறது

சென்னை: கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் 13ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து, பள்ளிகள் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பள்ளித்தலைமை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, நேற்று முதல் மாணவர்களை சேர்க்கும் பணியும் தொடங்கியது. தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் என மொத்தம் 32 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதுதவிர, தனியார் சுயநிதிப் பள்ளிகள் சுமார் 12 ஆயிரம் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 1 கோடியே 20 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஒன்றரை ஆண்டு காலம் பள்ளிகளை மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு, மே மாதம் தான் பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. கீழ்  வகுப்புகளை பொறுத்தவரையில் ஏப்ரல், மே  மாதத்தில் தேர்வுகள் நடந்தாலும் மே மாதம் இறுதியில்  விடுமுறை அறிவிக்கப்பட்டு, ஜூன் 13ம் தேதி பள்ளிகள்  திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதன்படி, வரும் 13ம் தேதி (நாளை மறுநாள்) தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து, பள்ளிகளின் வளாகங்கள் அனைத்தும் தூய்மைப் பணி, மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் என்று அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்து இருந்தார். இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தற்போது தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்புக்கு இணங்க, அனைத்து மாவட்டங்களிலும், மாணவர்களை சேர்ப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரங்களை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். பேரணி நடத்துவது, துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தனியார் பள்ளிகள் கட்டண பிரச்னை காரணமாக அரசுப் பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் ஆர்வமுடன் வருகின்றனர். உடனடியாக அந்த மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டும் வருகின்றனர். கடந்த கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு குறைந்த கால அளவில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதால் பாடத்திட்டம் குறைக்கப்பட்டது. அதனால் இந்த கல்வியாண்டில் முழுமையான பாடங்களை படிக்க வசதியாக முன்கூட்டியே பள்ளிகள் திறக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு, தற்போது பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், பாடத்திட்டம் முழுமையாக இடம்பெற உள்ளது. ஆசிரியர்களுக்கும் பாடத்திட்டத்தை போதிக்க போதிய கால அவகாசம் கிடைக்கும். மேலும், அதிக அளவில் மாணவர்கள் அரசுப் பள்ளிகளை நாடி வருவதால், அரசுப் பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.அதனால் வேலையின்றி இருக்கின்ற பட்டதாரிகளுக்கும் வேலை கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் தான் 13ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து அனைத்து ஆசிரியர்களும் 13ம் தேதி பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது….

The post தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை நாளை மறுநாள் திறக்க ஏற்பாடு: மாணவர் சேர்க்கையும் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Dinakaran ,
× RELATED அரசு சட்டக்கல்லூரிகளில்...