×

தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் புதிய சட்டவிதிகளை எதிர்த்து வழக்கு

தாம்பரம்: தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் சட்ட விதிகளை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது. அதில், பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறுவது, அங்கீகாரத்தை புதுப்பிப்பது, மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு, ஆசிரியர்கள் நியமனம் செய்வது உள்ளிட்ட பல்வேறு வகையான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இதனால், சிறுபான்மை பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த புதிய விதிமுறைகளை எதிர்த்து திருச்சியை சேர்ந்த கன்னியாஸ்திரிகள் சபை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத் சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது திருச்சியை சேர்ந்த செயின்ட் ஆன்ஸ் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் சபை சார்பில் மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால் ஆஜராகி, தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு புதிய விதிமுறைகளை தமிழக அரசு வகுத்துள்ளது. இந்த விதிகள் கிறிஸ்தவ சிறுபான்மை பள்ளிகளுக்கு பொருந்தாது. பல ஆண்டுகளாக கிறிஸ்தவ சிறுபான்மை பள்ளிகள் தமிழகத்தில் செயல்பட்டு வரும் நிலையில் திடீரென்று புதிய விதிமுறைகளை வகுத்தது சட்ட விரோதமானது. எனவே, இந்த புதிய விதிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். அப்போது, அரசு தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றார். இதையடுத்து, இந்த வழக்கில் பதில் தருமாறு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

The post தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் புதிய சட்டவிதிகளை எதிர்த்து வழக்கு appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ43.40 கோடியில்...