×

தனியார்மயம்

இந்திய ரயில்வே தனியார்மயமாக்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் ஒன்றிய அரசு எடுத்து வரும் ஒவ்வொருநடவடிக்கையையும் பார்க்கும் போது அந்த நோக்கம் உறுதியாகிறது. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அமைந்த பிறகு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் செயல்களை தொடங்கிவிட்டனர். சம்பந்தப்பட்ட துறைகள் லாபத்தில் இயங்க வேண்டுமானால் தனியார் மயம் தான் சிறந்தது என்ற காரணத்தை கூறி வருகின்றனர். இதனால் அந்நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். சமீபத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு கட்டணத்தை ரத்து செய்தால் அதற்கான ஜிஎஸ்டி கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்று ரயில்வே நிர்வாகம் மக்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இதை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு அளிக்கப்பட்டு வந்த ரயில்வே நிலங்களை 35 ஆண்டுகள் வரை தனியாருக்கு வழங்க ஒன்றிய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. தனியார் நிறுவனங்கள் சரக்கு கையாளும் முனையங்களை நாடு முழுவதும் 300 இடங்களில்  அமைத்தால் 1.2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று ஒன்றிய அரசு கூறுகிறது.மேலும் ரயில்வே நிர்வாகத்துக்கு செலவு குறையும் என்றும் காரணம் கூறப்படுகிறது. 171 பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்தில் இயங்குவதாக கடந்தாண்டு மக்களவையில் கூறிய ஒன்றிய அரசு கப்பல் போக்குவரத்து கழகம், கண்டெய்னர் கார்ப்பரேஷன், பாரத் எர்த் மூவர் உள்ளிட்ட சில லாபகரமான நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என்றும் அறிவித்தது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் எதிர்க்கட்சிகளின் கருத்துகளை காதில் போட்டுக்கொள்ளாமல் ஒன்றிய அரசு தான்தோன்றி தனமாக தங்களுக்கு வேண்டிய பணக்கார தொழிலதிபர்களான அம்பானியிடமும், அதானியிடமும் பணிகளை ஒப்படைத்து வருகிறது. இதே போல் ஏர் இந்தியா, ஆயுள்காப்பீடு கழகம், மின்சார வாரியம் ஆகியவற்றின் பங்குகளையும் தனியாருக்கு விற்பனை செய்யும் இலக்கை நோக்கி பயணித்து வருகிறது. நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லவும், பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்தில் இயங்கவும் தனியார்மயம் தேவைப்படுகிறது என்று கூறும் ஒன்றிய அரசு, மக்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்களில் லாபத்தை எதிர்பார்ப்பது நியாயமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடமே தாரைவார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் ஒவ்வொரு பங்காக விற்பனை செய்ய தொடங்கியுள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனால் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் நாடு முழுவதும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிடும். பாதுகாப்பு துறையில் அக்னிபாத் ஊழியர்களை போன்று அனைத்து துறையிலும் நிபந்தனையுடன் இளைஞர்கள் பணியில் அமர்த்தப்படும் நிலையும் ஏற்படலாம். பல ஆண்டுகளாக ஒன்றிய அரசின் அடையாளமாக இயங்கிவந்த பொதுத்துறை நிறுவனங்களை மீட்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்….

The post தனியார்மயம் appeared first on Dinakaran.

Tags : Indian Railways ,Union Government ,Dinakaran ,
× RELATED ரயில்கள் தடம் புரண்டதில் ரயில்வே உலக சாதனை:: மம்தா கேலி