×

தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை

 

தண்டையார்பேட்டை, மே 29: தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. தண்டையார்பேட்டை நெடுஞ்செழியன் நகரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல், டீசல், விமான பெட்ரோல் ஆகியவை கொண்டு செல்லும் நிறுவனத்தின் கிடங்கு உள்ளது. இங்கிருந்து டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல், விமான பெட்ரோல், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

மேலும் மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் சுத்திகரிக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை குழாய் மூலமாக தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு கொண்டுவரப்படும் ஆயில் குழாய்களில் திடீர் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி இந்தியன் ஆயில் நிறுவன முனையத்தின் தலைமை மேலாளர் நவீன்குமார் தலைமையில் நேற்று நடந்தது.

தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினர் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில் ஆயில் குழாய்களில் கசிவு ஏற்பட்ட நிலையில் குழாயில் ஆயில் செல்வதை நிறுத்திய பின்பு ஆயில் கசிவால் தீ பற்றி எரியத் தொடங்கிய நிலையில் தீயணைப்பு துறையினர், மருத்துவ துறையினர் மற்றும் மாவட்ட தொழில்துறை மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அனைத்து துறையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்து ஊழியர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதை தத்ரூபமாக செயல் விளக்கம் அளித்து ஆயில் நிறுவன ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், மாவட்ட தீயணைப்பு அதிகாரி மனோ பிரசன்னா உதவி மாவட்ட தீயணைப்பு அதிகாரி முருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள், மருத்துவர்கள், வட்டாட்சியர், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஊழியர்கள் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

The post தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை appeared first on Dinakaran.

Tags : Indian Oil Company ,Thandiyarpet ,Indian Oil Corporation ,Neduncheliyan Nagar ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.13.35 கோடி ஒதுக்கீடு