×

தக்காளி சாகுபடியை அதிகரிக்க மாவட்டத்தில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட வேண்டும்: விவசாயிகள் எதிர்பார்ப்பு

தேவதானப்பட்டி: மாவட்டத்தில் தக்காளி சாகுபடியை அதிகரிக்க வேண்டும் எனில், அவற்றை பாதுகாக்க வட்டார வாரியாக குளிர்பதன கிடங்குகள் அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தில் விவசாயிகள் அதிகம் பயிரிடும் காய்கறி பயிர்களில் தக்காளி முக்கிய இடத்தை பிடிக்கிறது. மாவட்டத்தில் பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி, போடி, சின்னமனூர், தேவதானப்பட்டி, கம்பம் உள்ளிட்ட இடங்களில் பணப்பயிர்களான தக்காளி, வெண்டை, கத்தரி, மிளகாய், காலிபிளவர், பூசணி, சாம்பார் பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய், முருங்கை, கொத்தவரங்காய், அவரை, பீன்ஸ், முருங்கைபீன்ஸ், கோவைக்காய், புடலங்காய், கருவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, பீட்ரூட், நூல்கோல், பட்டாணி, மொச்சை, உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.மாவட்டத்தின் முக்கிய காய்கறி மார்க்கெட்டுகள் ஆண்டிபட்டி, தேனி, சின்னமனூர், கம்பம், பெரியகுளம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த காய்கறி மார்க்கெட்டுகளில் இருந்து திருச்சி, கோவை, சென்னை, பெங்களூரூ, திருநெல்வேலி, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களுக்கு அதிக அளவில் பல்வேறு வகையான காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பணப்பயிர்களில் அதிக லாபத்தையும், அல்லது அதிக நஷ்டத்தையும் கொடுக்கக்கூடியதாக தக்காளி உள்ளது. தக்காளி அறுவடை செய்யும் போது மழை பெய்தால் முற்றிலும் சேதமடைந்து வீணாகிவிடும்.அதே போல் அதிக நடவு செய்து, காய்கறி மார்க்கெட்டிற்கு அதிகளவு வரத்து வந்தால் தக்காளியை விலைக்கு கேட்க ஆள் இருக்காது. தக்காளி சாகுபடியில் முக்கிய நோய்களாக வேரழுகல், இலைப்புள்ளி, புள்ளிவாடல், காய் புழு தாக்குதல் உள்ளிட்டவை ஏற்படுகிறது. அதே போல் இப்பகுதிகளில் தக்காளி செடிகளின் நடவு குறைந்துபோனால் மார்க்கெட்டுக்கு வரத்து குறையும். அதுபோன்ற நேரங்களில் ஒரு கிலோ ரூ.100 வரை விற்பனையாகும். ஆனால் இது எப்போதாவது மட்டுமே நடைபெறும். மற்றபடி அதிக அளவில் தக்காளி அதிகம் விளைச்சல் ஏற்பட்டு கொள்முதல் விலை குறைந்துபோதால் விவசாயிகள் நஷ்டம் அடைவதுதான் தொடர்கதையாக உள்ளது.நமது நாட்டில் தற்போது கோ 1, கோ 2, கோ 3, பிகேஎம் 1, பையூர் 1, சொரூபி, அர்காவிகாஸ், அர்கா சவுரப், அர்கா அஹீட்டி, அர்கா ஆஷிஷ், அர்கா அலோக், அர்கா அபா, பஞ்சாப் அகாரா மற்றும் சக்தி வீரிய ஒட்டு ரகங்களான கோ பி எச் 1, வைஷாலி, ரூபாலி, நவீன் எம்டிஎச் 4, சதா பஹார், குல்மொஹர், அர்கா விஷால் மற்றும் அர்கா வரதன் உள்ளிட்ட தக்காளி ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தக்காளி சாகுபடியில் அதிக தண்ணீர் தேக்கத்தால் வேரழுகல் நோய் தாக்குகிறது.பின்னர் இலைப்புள்ளி நோய், புள்ளி வாடல் நோய், காய்ப்புழு தாக்குதல் உள்ளிட்டவையும் இந்த செடிகளை அதிகம் பாதிக்கிறது. இந்த வகையான நோய்களை தோட்டக்கலைத்துறையினர் ஆராய்ச்சி செய்து முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.மாவட்டத்தில் தக்காளியை சேமிக்க அரசுத்துறை சார்பில் வட்டார அளவில் குளிர்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும். அதனை குறைந்த வாடகையில் பயன்படுத்த விவசாயிகளை அனுமதிக்க வேண்டும். தற்போது மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் தக்காளியில் 50 சதவீதம் வீணாகிறது. தக்காளியை மும்முரமாக அறுவடை செய்யும் நேரங்களில் பலத்த மழை பெய்தால், அனைத்து தாக்காளியும் செடியிலேயே அழுகி வீணாகிறது.குறைந்தளவு விலை விற்கும் போது தக்காளியை அறுவடை செய்யாமல் அப்படியே செடியிலேயே விவசாயிகள் விட்டு விடுகின்றனர். இது தவிர சில விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்து மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விலை குறைவாக விற்றாலும், விற்காமலும் இருந்தாலும் அப்படியே சாலை ஓரத்தில் கொட்டிவிட்டுச்செல்கின்றனர். நோய் தாக்குதலில் இருந்து மருந்து தெளித்து தக்காளியை காப்பாற்றி கொண்டு வந்து விலை இல்லை, மழையினால் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் 50 சதவிகிதம் தக்காளி உற்பத்தி வீணாகிறது. இது அவற்றை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. ஆகையால் அரசு இம்மாவட்டத்தில் வட்டாரங்களில் தலா ஒரு குளிர் பதன கிடங்கு அமைத்து அதிக அறுவடை காலங்களிலும், குறைந்த விலைக்கு விற்பனையாகும் தக்காளியை சேமித்து வைத்து சீரான முறயைில் விநியோகம் செய்தால் விவசாயிகளுக்கும் நிரந்தரமான விலை கிடைக்கும். காய்கறி கடைகளில் தக்காளியை வாங்கும் நுகர்வோருக்கும் விலை ஏற்ற, இறக்கம் இல்லாமல் சீராகும்.தற்போது தக்காளியில் இருந்து தக்காளி சாஸ், தக்காளி கேச்சப், தக்காளி ஊறுகாய் போன்றவை தயார் செய்யப்பட்டு விற்பனையில் உள்ளது. இதுபோன்ற மதிப்புக்கூட்டு பொருட்களை தயாரிக்க தேவையான பயிற்சியை விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் வழங்க வேண்டும். அத்துடன் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதற்கு ேதவையான இயந்திரங்களையும் அரசு தரப்பில் மானிய விலையில் வழங்க வேண்டும்.தக்காளி சாகுபடியில் நோய் கட்டுப்பாடு செயல்முறைகள், துறை சார்பில் நேரடி கள ஆலோசனைகள், அதிக அறுவடை நடைபெறும் காலங்களில் குளிர் பதன கிடங்குகளில் சேமிக்கும் வழிமுறைகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் சாகுபடி விவசாயிகளுக்கும் இடையே ஒரு நிரந்தர தொடர்பினை ஏற்படுத்தி அவற்றுக்கு அதிக விலை கிடைக்கச்செய்தல், தக்காளியில் இருந்து மதிப்புக்கூட்டு பொருட்களை தயாரிப்பதற்கான உபகரணங்களை மானியத்தில் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தற்போது அவசியமானதாக உள்ளது.இது போன்ற நடவடிக்கைகள் தக்காளி சாகுபடி விவசாயிகள் வாழ்வில் முன்னேற்றத்தை உருவாக்கும் என்பதை மறுப்பதற்கில்லை….

The post தக்காளி சாகுபடியை அதிகரிக்க மாவட்டத்தில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட வேண்டும்: விவசாயிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Devadanapatti ,Dinakaran ,
× RELATED ஊராட்சி வாகன பேட்டரி திருட்டு: போலீசார் விசாரணை