×

ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை கையகப்படுத்த டெபாசிட் செய்த ரூ.68 கோடியை திரும்ப பெற மனு: சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் அரசு தாக்கல்

சென்னை: ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி கடந்த அதிமுக அரசு உத்தரவு பிறப்பித்தது. அந்த வீட்டிற்காக சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்தது. 24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா இல்லத்திற்கு இழப்பீட்டு தொகையையும் தமிழக அரசு செலுத்தியது. ஜெயலலிதா செலுத்தாமல் இருக்கும் வருமான வரி பாக்கி ரூ.36.9 கோடியும் அரசு சார்பில் செலுத்தப்பட்டுள்ளது. இதை எதிர்த்து  தீபா தொடர்ந்த வழக்கு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசின் இழப்பீட்டு தொகையைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று தீபா, தீபக் மற்றும் வருமான வரித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை எதிர்த்த சட்டபூர்வ வாரிசுகான தீபக், தீபா தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி சேஷசாயி, வேதா நிலையத்தை கையகப்படுத்தி முந்தைய அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து கடந்த நவம்பர் 24ம் தேதி தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை  உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்றாம் நபர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய மற்றும் சத்திகுமார் சுகுமார குருப் ஆகியோர் அடங்கிய அமர்வு தனி நீதிபதி உத்தரவில் தவறில்லை என்று கூறி அதிமுக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர். இந்த வழக்கு, சென்னை ஆறாவது கூடுதல் சிவில் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் சென்னை வருவாய் கோட்டாட்சியர் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், வேதா இல்லத்தை விலைக்கு வாங்குவதற்காக 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்த தொகையை திரும்ப பெறுவதாகவும், கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வருமானவரித் துறையின் சார்பில் சில விளக்கம் தேவைப்படுவதால் இந்த வழக்கில் வரும் 18ம் தேதி உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தெரிவித்தார்….

The post ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை கையகப்படுத்த டெபாசிட் செய்த ரூ.68 கோடியை திரும்ப பெற மனு: சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் அரசு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Jayalalithaa ,Veda ,Chennai City Civil Court ,Chennai ,AIADMK government ,
× RELATED பிரம்மனுக்கு வேதங்கள் உபதேசித்த பெருமான்