×

சோழவந்தான் அருகே நண்பரை கொன்ற இருவர் 2 ஆண்டுகளுக்கு பின் கைது

சோழவந்தான், நவ. 14: சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் கடந்த 9.8.2022ம் தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது. அவர் யார் என்ற அடையாளம் தெரியாத நிலையில், குளிக்கும் போது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்த சோழவந்தான் போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மதுரை சொக்கலிங்க நகர் அர்ஜூனன் மகன் செந்தில் (40), சம்மட்டிபுரம் சையது சுலைமான் மகன் சையது ஜாபர் அலி (41) ஆகிய இருவரும், இரண்டு வருடங்களுக்கு முன் மதுரை, வில்லாபுரத்தை சேர்ந்த சேது என்பவரது மகன் பாலமுருகன் (35) என்பவரை கொலை செய்து ஆற்றில் தள்ளியதாக கூறி, நேற்று சோழவந்தான் பேட்டை விஏஓ வீரபாண்டியிடம் சரணடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் சோழவந்தான் போலீசாரிடம் விஏஓ ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினார். அப்போது, செந்தில், சையது ஜாபர் அலி ஆகியோரிடம், அவர்களது நண்பரான பாலமுருகன் பணம் வாங்கி இருந்தார். அதனை திரும்ப தரவில்லை. இதனால் சம்பவத்தன்று மூவரும் மதுரையிலிருந்து திருவேடகம் வைகையாற்று பகுதிக்கு வந்து மது அருந்தினர். அப்போது பணம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் இருவரும் பாலமுருகனை சரமாரியாக தாக்கி ஆற்றில் தள்ளிவிட்டு தப்பியுள்ளனர்.

பாலமுருகன் தனது குடும்பத்தாரிடம் தொடர்பில்லாமல் வெளியில் சுற்றுவது வழக்கம். அதனால் குடும்பத்தாரும் அவரை தேடவில்லை. இந்நிலையில் இது நாள் வரை கொலையை மறைத்து வைத்திருந்த செந்தில்,சையது ஜாபர் அலி ஆகியோர் சமீபத்தில் அவர்களின் நண்பர்களிடம் போதையில் கொலை செய்ததாக உளறி உள்ளனர். இதன் மூலம் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் விஏஓ விடம் சரணடைந்துள்ளனர். இரண்டு வருடங்களுக்கு பின் நண்பரை கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சோழவந்தான் அருகே நண்பரை கொன்ற இருவர் 2 ஆண்டுகளுக்கு பின் கைது appeared first on Dinakaran.

Tags : Cholavantan ,Cholavandan ,Thiruvedakam Vaigai river ,Cholavanthan ,
× RELATED ராஜஸ்தான் விபத்தில் உயிரிழந்த தேனி...