×

வாயிலை பூட்டி தடுத்து நிறுத்தினர் சட்டசபைக்குள் அனுமதிக்காததால் நியமன எம்எல்ஏக்கள் தர்ணா: புதுவையில் பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை உள்ளே நியமன எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்  பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி அரசின் பரிந்துரையின்றி பாஜகவை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்எல்ஏக்களாக  மத்திய அரசு நியமித்தது. அவர்களை சபாநாயகர் வைத்திலிங்கம் அங்கீகரிக்க மறுத்துவிட்டார். பாஜகவை சேர்ந்தவர்கள் தன்னிச்சையாக  நியமிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் லட்சுமி நாராயணன் எம்எல்ஏ வழக்கு தொடர்ந்தார். இதில் மத்திய அரசு நியமனம் செல்லும் என தீர்ப்பு  வெளியானது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுடன் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த 3 பேரையும் சட்டசபை உள்ளே  அனுமதிக்கவில்லை. அவர்கள் வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

உச்சநீதிமன்றத்தில், மேல்முறையீடு மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை கேட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 15ம்  தேதி விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடையில்லை என தெரிவித்தனர். இதனால் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தில் தடையை  மீறி நுழைவோம் என நியமன எம்எல்ஏக்கள் அறிவித்தனர்.அதன்படி நேற்று காலை 9.30 மணிக்கு புதுச்சேரி சட்டசபை மீண்டும் கூடியது. இதில்  பங்கேற்பதற்காக பாஜவைச் சேர்ந்த நியமன எம்எல்ஏக்களான சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரும் ஒரே காரில் வந்தனர். அவர்களை  உள்ளே விடாமல் தடுக்கும் வகையில் முன்கூட்டியே சட்டசபை நுழைவு வாயிலுக்கு காவலர்கள் பூட்டு போட்டு மூடி வைத்திருந்தனர்.

இதையடுத்து அங்கிருந்த சபை காவலர்களிடம் உச்சநீதிமன்ற உத்தரவுபடி தங்களை சபைக்குள் அனுமதிக்க வேண்டுமென கூறினர்.அதற்கு சட்டசபை  காவலர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களை மட்டும்தான் உள்ளே விட வேண்டுமென சபாநாயகர் தங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக  தெரிவித்தனர். அப்படியென்றால் அதற்கான எழுத்துப்பூர்வ உத்தரவை காண்பிக்குமாறு நியமன எம்எல்ஏக்கள் காவலர்களிடம் வாக்குவாதத்தில்  ஈடுபட்டனர். தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். காலை 9.35 மணியிலிருந்து 10.25 வரை சட்டசபை வாயிலில் 3 நியமன எம்எல்ஏக்களும் 50  நிமிடமாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது, 3 பேரும் வருகிற 19ம்தேதி உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு வரும்போது சபாநாயகர் மீது  ஆதாரத்துடன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட...