×

சேலம் விஐபியை கலங்கடித்த மாஜி அமைச்சரின் பேச்சை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தங்க இடம் கொடுத்தால், வீட்டையே ஆட்டைய போடும் நபரின் பேச்சால் யார் கலங்கி போய் இருக்காங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘நெற்களஞ்சியம் மாவட்ட இலைகட்சி சார்பில் நெற்களஞ்சிய ரயிலடி பகுதியில் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சேலம் விஐபியின் விசுவாசியான மனுநீதி சோழன் மாவட்ட மாஜி அமைச்சர் தலைமை வகித்தாராம். நெற்களஞ்சிய மாவட்டத்தில் முதல்முறையாக தனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்ததோடு, கூட்டமும் கூடியதை பார்த்து உற்சாகத்தில் மிதந்தாராம். என்ன பேசுகிறோம் என்பதையே மறந்துட்டாராம். உணர்ச்சி பெருக்கில் இருந்த மாஜி அமைச்சர், திடீரென்று ‘இலை கட்சிக்கு நானும் ஒரு நாள் தலைமை தாங்கலாம்’ என பேசினாராம். அந்த பேச்சை கேட்ட அவரின் அடிபொடிகள் கைதட்டி ஆரவாரம் செய்தாங்களாம். அடிபொடிகளின் கைதட்டல் சத்தம் கேட்டு நிஜ உலகத்துக்கு வந்த மாஜி அமைச்சர், நாமே அதிகபிரசங்கி தனமாக பேசிட்டோமோ என்று நாக்கை கடித்து கொண்டாராம். இதை கேட்ட சேலத்துக்காரருக்கு நெருக்கமானவர்கள் என்ன இப்படி பேசுகிறார். இவரது பின்னணியில் சின்ன மம்மி இருக்கிறாரோ என்று சந்தேகம் கிளப்பினாங்களாம். அப்புறம் அதிக பிரசங்கி தன பேச்சுக்கு சால்ஜாப்பு சொல்வதை போல டிராக் மாற்றி பேசிட்டாராம். மாஜி அமைச்சர் ஏற்கனவே சந்தேக லிஸ்டில் இருக்கிறாராம். இவரின் சமீபத்திய பேச்சு, அதை உறுதிப்படுத்துவதாக இருப்பதாக சேலம் விஐபிக்கு தகவல் மேல் தகவல் பறந்ததாம். அவரை நான் பார்த்துக்கிறேன். நீங்கள் உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்க. அவர் யாரை சந்திக்கிறார். போனில் யாரிடம் பேசுகிறார் என்பதை அடிக்கடி தகவல் தாங்க என்று சொன்னாராம். ெநற்களஞ்சிய மாஜியின் பேச்சால், சேலம் விஐபி கலக்கத்தில் தான் இருக்கிறாராம். தாமரை தலைவரும் சந்திக்க மறுத்ததால் இப்போது தேர்தல் கமிஷனையே நம்பி இருக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கரன்சிக்காக காட்டில் உள்ள விலங்கையே அழிக்கும் நபர்களை என்ன சொல்வது…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘வெயிலூர் மாவட்டத்துல அணையான தாலுகா ஒடுக்கமான ஊர்ல மான், பன்றி, மயில் போன்ற வன விலங்குகள் இருக்குது. இந்த வன விலங்குகளை, மர்ம கும்பல் ஒன்று இறைச்சிக்காக வேட்டையாடி செம காசு பார்க்குதாம். சில கும்பல் விலங்குகளின் தோலுக்காகவும் வேட்டையாடுறாங்களாம். வன விலங்குகளின் இறைச்சி அந்த ஏரியாவுலயே சர்வ சாதாரணமாக விற்பனை செய்றாங்க. ஜனங்க அதிக விலை கொடுத்தும் வாங்கிட்டு போறாங்க. இதனை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வன அதிகாரிங்க, சம்திங் வாங்கிக்கிட்டு, சத்தமில்லாம போய்டுறாங்களாம். இதனால், நாளுக்கு நாள் வன விலங்குகள் வேட்டையாடுறது அதிகமாகிக்கிட்டே போகுதாம். காடுகளில் வனவிலங்குகள் அழிந்து கொண்டே வருதாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வாஸ்து பார்ப்ப்பதால் குப்பையும் கூலமுமாக இருக்கும் எம்எல்ஏ ஆபீஸ் எது…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி அலுவலக கட்டிடம் ஒழுகினசேரியில் உள்ளது. கடந்த காலங்களில் எம்எல்ஏக்களாக இருந்தவர்கள் அவ்வப்போது அலுவலகம் வந்து பொதுமக்களிடம் மனுக்களை வாங்குவாங்க. சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த பின்னர் அலுவலகம் முறையாக திறப்பது இல்லை. இதனால் குப்பைகள் தேங்கி தொங்கிய பூட்டுடன் காணப்படுகிறதாம். இது தொடர்பாக தொடர்புடைய தாமரை கட்சியின் மக்கள் பிரதிநிதியிடம் கேட்டால், ஆபிசின் வாஸ்து சரியில்லை, அதனால் தான் அலுவலகம் திறப்பது இல்லை.. நானும் வருவதில்லை என்கிறாராம்.. இதனால் பாதிக்கப்படுவது என்னவே மக்கள் தானாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அல்வா மாவட்டத்துல பதவி இல்லாதவங்க, உச்ச மன்ற கட்டிடத்தையே பார்த்துகிட்டு இருக்காங்களாமே, ஏனாம்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ஒற்றைத் தலைமை சண்டையில் இலை கட்சி இரண்டாகி கிடக்கிறது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் நீக்கம் என இருவரும் போட்டி போட்டு ஒருவரை ஒருவர் நீக்கி வருகின்றனர். இப்போதைக்கு சேலம்காரரிடம் முக்கிய பொறுப்பு இருந்தாலும் எது எவ்வளவு நாளைக்கு இருக்கும் என்று அல்வா மாவட்ட இலை கட்சியினர் பேசிக்கிறாங்க. காரணத்தை விசாரித்தால், ‘சேலம்காரரின் ஊழல் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. அதில் கண்டிப்பாக அவருக்கு நெகட்டிவ் தீர்ப்பு தான் வரும். பின்னர், கட்சி தேனிகாரர் கையில் வந்து விடும். இப்போது சேலம்காரருக்காக தொண்டை வறண்டு போகும் அளவுக்கு கத்தும் நிர்வாகிகள், தீர்ப்புக்கு பிறகு தேனி பக்கம் வருவாங்க. அப்போது நாங்கள் தான் இலை கட்சி என்பதை நிரூபிப்போம் என்று அல்வா மாவட்டத்தில் தேனிக்காரர் அணியினர் சொல்லி சிரிக்கிறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலை கட்சி நிர்வாகிகளிடைய விழுப்புரத்தில் என்ன பிரச்னை…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘விழுப்புரம் மாவட்டத்தில் இலை கட்சி ஒன்றிய செயலாளர்களிடையே டெண்டர் கமிஷன்தொகை பங்கீட்டுக்கொள்வதில் மோதல் இருக்காம். ஒன்றியத்துக்கு ரெண்டு செயலாளர்கள் இருந்து வந்த நிலையில், ஆட்சியின் போது   அரசு ஒப்பந்தப் பணிகளில் பர்சன்டேஜ் பிரித்து வழங்கப்பட்டதாம். டெண்டர் பர்சன்டேஜ் தொகையை பங்கு போட்டுக் கொள்வதில் அப்போதிலிருந்து பிரச்னை நீடித்து வந்ததாம். இந்நிலையில் ஆட்சி முடிந்த பிறகும் கோலியனூர் ஒன்றியத்தில் டெண்டர் பர்சன்டேஜ் பிரச்சனை இன்னும் ஓயவில்லையாம். இரு ஒன்றிய செயலாளர்களும் மாறி, மாறி பர்சன்டேஜ் பிரச்னையை கட்சி தலைமை வரை கொண்டு சென்றிருக்கிறார்களாம். இவர்களின் பிரச்னையை கேட்ட இலைகட்சிக்கட்சி தலைமை, முதல்ல கட்சி பிரச்னை முடியட்டும்… அப்புறம் நம்ம பிரச்னையை பார்த்துக்கலாம்…’’ என்று பதில் சொல்லி திருப்பி அனுப்பிட்டாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. …

The post சேலம் விஐபியை கலங்கடித்த மாஜி அமைச்சரின் பேச்சை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Salem ,Peter ,
× RELATED சேலம் மாநகராட்சி முன்னாள்...