×

சேலம் மாநகரை ஒட்டியுள்ள பை-பாஸ் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்-அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

சேலம் : சேலம் மாநகரை ஒட்டியுள்ள பை-பாஸ் சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வாகனங்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சேலம் மாநகரை ஒட்டி, பெங்களூரு பை-பாஸ், சென்னை பை-பாஸ், மதுரை பை-பாஸ், கோவை-பாஸ் சாலைகள் உள்ளன. இந்த சாலைகளின் ஓரத்தில் வழிநெடுகிலும் ஆங்காங்கே லாரிகள், டெம்போக்கள், வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாதக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்த வாகனங்களால், பெரும் சாலை விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் இந்த பை-பாஸ் சாலைகளில், அதிகளவு கனரக வாகனங்கள் செல்கின்றன. அப்படி இருக்கையில், சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பதால் எப்போது வேண்டுமானாலும் விபத்துகள் நடக்கும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த 2 மாதமாக இத்தகைய வாகனங்கள் நிறுத்துவது அதிகரித்துள்ளது. இதற்கு முன் இப்படி பை-பாஸ் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி வைப்பதில்லை. மாநகர பகுதியில் செவ்வாய்பேட்டையில் லாரி மார்க்கெட் உள்ளது. அங்கும் அதிகளவு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது. போதிய சரக்கு போக்குவரத்து இல்லாத காரணத்தால், சாலைகளில் வாகனங்களை நிறுத்த வேண்டியுள்ளது என டிரைவர்களை கூறுகின்றனர். குறிப்பாக திருவாகவுண்டனூர் பை-பாஸ், கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பகுதி, பட்டர்பிளே மேம்பால பகுதி, உடையாப்பட்டி பை-பாசில் 100க்கும் மேற்பட்ட லாரிகளும், டெம்போக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை அப்புறப்படுத்தினால் தான், விபத்துகளில் இருந்து வாகன ஓட்டிகள் தப்ப இயலும். இதற்கு முன்பு மாநகர போக்குவரத்து பிரிவு போலீசாரும், நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்துவார்கள். மீறி நிறுத்தப்படும் வாகனங்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால், கடந்த சில மாதங்களாக மாநகர போலீசார் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.இதன்காரணமாகவே அதிகப்படியான வாகனங்களை சாலையில் நிறுத்தி வைக்கின்றனர். எனவே இனியாவது இந்த வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, “மாநகரை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் பழுதடைந்த வாகனங்களையும், லோடு கிடைக்காத வாகனங்களையும் சிலர் நிறுத்தி வைத்துள்ளனர். விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு அந்த வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’’ என்றனர்….

The post சேலம் மாநகரை ஒட்டியுள்ள பை-பாஸ் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்-அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem city ,Dinakaran ,
× RELATED விஷம் குடித்த கணவர் சாவு மருத்துவமனையில் மனைவி தற்கொலை