×

டெல்லி உயர் நீதிமன்றத்தில் காரசார வாதம் சசிகலா, டிடிவி இருவரும் கிரிமினல் குற்றவாளிகள் : இரட்டை இலை சின்ன வழக்கில் ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு

சென்னை : இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் ஆகிய இருவரும் கிரிமினல் குற்றவாளிகள் என ஓபிஎஸ் தரப்பில் காரசார வாதம் நடந்தது. அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னம் ஆகியவைகளை ஒதுக்கீடு செய்த தேர்தல் ஆணைய உத்தரவிற்கு எதிராக டிடிவி.தினகரன் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதில் டிடிவி.தினகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய தரப்பு வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதிட்டு வருகிறார்.இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி மற்றும் சங்கீதா டிங்கிரி சேகல் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பு வாதத்தில், “கட்சியில் எங்களுக்குதான் அதிகப்படியான பெரும்பான்மை உள்ளது.

 குறிப்பாக சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் ஆகிய இருவர் மீதும் கிரிமினல் குற்றப்பின்னணிகள் உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களால் எவ்வாறு கட்சியை வழிநடத்த முடியும். இதில் சிறையில் உள்ள ஒருவருக்கு பொதுச்செயலாளர் பதவியை உரிமை கோருவது வேடிக்கையாக உள்ளது. அது எந்த விதத்தில் நியாயம் என்பது புரியவில்லை. அதேபோல் டிடிவி.தினகரன் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு ஒன்றில் தான் வெளிநாட்டு இந்தியர் என தெரிவித்துள்ளார்’’ என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட டிடிவி.தினகரன் தரப்பு வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, “டிடிவி.தினகரன் 2 முறை எம்பியாகவும், தற்போது ஆர்கே நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இதனால் அவர் மீது கிரிமினல் குற்றம் சுமத்தப்படுவதை ஏற்க முடியாது’’ என குறிப்பிட்டார். இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை ஆகஸ்ட் 2ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : High court, Argumentation, Sasikala, DTV, Criminal criminals, Double leaf small case, O.P.S
× RELATED தேர்தல், கொரோனா விதிமீறல்: பிறந்த நாள் கொண்டாடிய பாஜக எம்பி மீது வழக்கு