×

செம்பியநல்லூர் ஊராட்சியில் அடிப்படை வசதி கோரி மக்கள் உண்ணாவிரத போராட்டம்

அவிநாசி : அடிப்படை வசதி கோரி, அவிநாசி ஒன்றியம் செம்பியநல்லூர் ஊராட்சி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவிநாசி ஒன்றியம் செம்பியநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட ஸ்ரீ சாய் கார்டன், ஸ்ரீ வாரி கார்டன், கீரீன் பீல்டு அக்வாஅவென்யூ ஆகிய பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த  5 ஆண்டுகளாக வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி செம்பியநல்லூர் ஊராட்சி முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகள்: அவிநாசியில் இருந்து சேவூர் செல்லும் பிரதான சாலையில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் குடியிருப்பு பகுதிக்கு செல்ல சரியான சாலை வசதி இல்லை. இடைப்பட்ட தூரத்தில் ஒரு தெருவிளக்கு கூட எரிவதில்லை. ஆழ்துளைக்கிணறு, குடிநீர்வசதியும் இதுவரை ஊராட்சி நிர்வாகத்தினர் செய்து தரவில்லை. குடிநீர் குழாய் அமைக்கப்பட்டும் சில நபர்களின் குறுக்கீட்டால் எவ்வித காரணமின்றி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குடிநீருக்காக  2 கிலோமீட்டர் தூரம் சென்று குடிநீர் எடுத்துவர வேண்டி உள்ளது. மேலும் முறையான வடிகால் பாதை இருந்தும் ஒரு சில தனி நபர்கள் குறுக்கீட்டால் கழிவுநீர் பாதை முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளது.இதனால் கழிவுநீர் வெளியேறாமல் எங்கள் பகுதியைச் சுற்றி தேங்கியே உள்ளதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. சாக்கடைக்கால்வாய் பிரதான கால்வாய்க்கு செல்வதேயில்லை. இப்பகுதிக்கு என அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றுக்கான மின் இணைப்பு நில உரிமையாளர் மூலம் மின்சார வாரியத்திற்கும், ஊராட்சிக்கும் வழங்கப்பட்டும் இன்னமும் ஆழ்துளை கிணற்றுநீர் வழங்கப்படவில்லை. கிரீன் பீல்டு அக்வா அவென்யூ அருகில் உள்ள கோழிப்பண்ணையில் இருந்து வரும் துர்நாற்றத்தால் நோய்தொற்றும் அபாயம் உள்ளது. சுகாதாரமற்ற முறையில் இங்கு கோழிகள் பராமரிக்கப்படுகின்றன. குடியிருப்புகளின் அருகில் கோழிக்கழிவுகளும் அதே இடத்தில் கொட்டப்படுகிறது. இப்பகுதிக்கு எதிரே உள்ள காலி இடத்தில் நகரப்பகுதியிலிருந்து,பல்வேறு ஊர்களிலிருந்து  செப்டிக் டேங்க் கழிவுகளை லாரிகளில்  தினமும்  கொண்டுவந்து கொட்டுவது வாடிக்கையாகி உள்ளது. இதை ஊராட்சி நிர்வாகத்தினர் தடுப்பதில்லை. சூர்யா அவென்யூவில் இருந்து வரும் கழிவு நீரானது முறையான கால்வாய் வசதி இல்லாததால், பொது நடைபாதை வழியாகவே செல்கிறது. இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ஊராட்சி நிர்வாகம் என அனைத்து தரப்பினரும் புகார் மனு கொடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையுமில்லை. ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சிமன்ற தலைவர் சுதாவேல்முருகன், அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் ஆகியோர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குடியிருப்பு பகுதிக்கு அனைவரும் நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் இரண்டு நாட்களில்  உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.  இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறுகையில், தற்காலிகமாக உண்ணாவிரதப்போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளை செய்வது தாமதமானால், மீண்டும் போராட்டம் நடைபெறும் என்றனர்….

The post செம்பியநல்லூர் ஊராட்சியில் அடிப்படை வசதி கோரி மக்கள் உண்ணாவிரத போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Sembianallur ,Avinasi ,Avinasi Union Sembianallur panchayat ,panchayat ,Sembianallur panchayat ,Dinakaran ,
× RELATED கோவை ஏ.டி.எம்.-மில் நூதனமுறையில் திருட்டு