×

சென்னை மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் கண்டித்து திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி. நவ.15: சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் பாலாஜி என்ற புற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவரை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு தமிழகத்தில் உள்ள மருத்துவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக நேற்று திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தின் முன்பு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் இந்திய மருத்துவ கழகம் ஆகியோர் இணைந்து 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் மருத்துவர் அருளீஸ்வரன் தலைமை தாங்கினார்ய இதில் இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் மருத்துவர் அஷ்ரப், மூத்த மருத்துவர்கள் குணசேகரன், திருச்சி மாவட்ட தலைவர் முகேஷ் மோகன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்த ஆர்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மருத்துவர் அருளீஸ்வரன் கூறுகையில், மருத்துவமனைகளில் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் பணியமர்த்தப்பட வேண்டும்.

ஒவ்வொரு முறையும் மருத்துவ பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதற்கு பல கட்ட போராட்டங்களை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவ பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மாவட்டம் வாரியாக ஒவ்வொரு மாதமும் மாநகர மாவட்ட காவல்துறை அலுவலகங்களில் நடைபெறும் க்ரைம் ஆய்வு கூட்டங்களில் மருத்துவர்கள் மீதான தாக்குதல் குறித்தும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்றார்.

The post சென்னை மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் கண்டித்து திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Trichy Government Hospital ,Chennai ,Trichy ,Balaji ,Chennai Government Hospital ,Tamil Nadu ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு...